46 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஆவணப்படம்


சில தொழில்நுட்ப மற்றும் சட்டச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த புகழ்பெற்ற பாடகியான ஆரெதா ஃப்ராங்க்ளினின் ’அமேசிங் கிரேஸ்’ என்ற லைவ் ஆராதனைப் பாடலின் ஆவணப்படம் 46 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகிறது. 1972-ல் இரண்டு இரவுகளில் நடந்த ஆராதனை நிகழ்ச்சியின் தொகுப்பே இந்த ‘அமேசிங் கிரேஸ்’ ஆவணப்படம். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் பிரபல திரைப்பட இயக்குநர் சிட்னி பொல்லாக் இயக்கிய இந்தப்படத்தில் காட்சியுடன் ஒலி அமைப்பு சரியாகப் பொருந்தாமல் இருந்ததால் வெளியிடத் தாமதமானது. 2007-ல் தயாரிப்பாளர் ஆலன் எலியட் இந்தப் பழைய ஆல்பத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினார். 2015-ல் டொரண்டோ மற்றும் டெலுரைட் திரைப்பட விழாக்களில் வெளியிட இருந்தார். ஆனால், ஆரெதா ஃப்ராங்க்ளினின் வழக்கறிஞர் வெளியீட்டுக்குத் தடை வாங்கினார். இந்நிலையில் ஆகஸ்ட் 16, 2018-ல் ஆரெதா ஃப்ராங்க்ளின் இறந்தார். அவரது மறைவை ஒட்டி இந்த ஆவணப்படத்தை அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்காகத் திரையிட்டார் எலியட். ஆவணப்படம் சிறப்பாக இருந்ததையொட்டி தற்போது இந்த ஆவணப்படம் அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கிறது.


சுவாரஸ்யம் கூட்டும் ‘கனவு'

கணேசகுமாரன்

25 ஆண்டுகளைக் கடந்தும் ஒரு சிற்றிதழாகத் தன்னை நிறுவி வருகிறது கனவு காலாண்டிதழ்.தீவிரமான எழுத்துப் பணியில் இயங்கிக்கொண்டே இப்படி ஒரு இதழைத் தொடர்ச்சியாகக் கொண்டு வருவது பெரும் சாதனைதான். இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான சுப்ரபாரதி மணியனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இப்போது வெளியாகியிருக்கும் கனவு இதழிலும் ஆச்சரியங்கள் தொடர்கின்றன. சிறார் எழுத்தாளர் எனப் பலரால் அறியப்படும் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசனின் ‘ டிகிரி காபி’ கதை இதற்குச் சான்று. ஒரு சிறுகதை எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதை நிறுவுவது போல் இக்கதை இருக்கிறது. 24 ம் நூற்றாண்டு , 30 ம் நூற்றாண்டு எனக் காலபேதத்தில் இயங்கும் கதையில், ’மனித மூச்சுக்காற்றையே எரிபொருளாக’ , ‘ போல்சின்ஸ்கீகாரர்கள்’ என வித்தியாசமான வார்த்தைப்பிரயோகங்களும் கற்பனைகளும் அருமை. கதை முடிவிலோ கும்பகோணம் டிகிரி காபி சஸ்பென்ஸ் பிரமாதப்படுத்துகிறது. சொல்லப்போனால், இதழின் விலையான 10 ரூபாய் இந்தக் கதைக்கு மட்டுமே சரியாகிவிட்டது. இதழின் இன்னொரு சிறப்பம்சம் சினிமா சார்ந்த சிறு சிறு கட்டுரைகள். ஒவ்வொரு இதழிலுமே ஏதாவதொரு வகையில் இப்படிப்பட்ட கட்டுரைகளைத் தேடியெடுத்துப் பிரசுரித்து விடுகிறார் சுப்ரபாரதி மணியன். மாதங்கியின் சிறுகதையும் வித்தியாசமான ஒன்று. ஆனால், முடிவில் மட்டும் சிறு சிக்கல். இருந்தாலும் சுவாரஸ்ய நடை என்பதை மறுக்க முடியாது. சிறுகதை என்ற தலைப்பிலே சிறுகதை எழுதியிருக்கும் புதுவை யுகபாரதியின் கதைகூட அட போட வைக்கிறது. முழுமையான சிறுகதையாக உருவாகாவிட்டாலும் வித்தியாச முயற்சிக்குப் பாராட்டுகள். இதழில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் பரவாயில்லை ரகம் என்றாலும் தனியொரு மனிதனாய் சுப்ரபாரதி மணியனின் உழைப்புக்கு முன் இதுபோன்ற நெருடல்கள் குறையாகத் தோன்றவில்லை. சுப்ரபாரதி மணியன் தொடர்ந்து நாவல்கள் எழுதி வருகிறார். சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதி வருகிறார். கவிதைகள் , கட்டுரைகளை மொழி பெயர்க்கிறார். கூடவே, கனவு சிற்றிதழையும் நடத்தி வருகிறார். தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்குதலே ஓர் இலக்கியவாதியின் அடையாளம் என்பதை நிரூபித்துவரும் சுப்ரபாரதி மணியனின் கனவு மெய்ப்பட வாழ்த்துகள்.

x