நிழற்சாலை


பழமுதிர் வார்த்தை!

இந்த முறையும்
தேனம்மாள் தோட்டத்து
நவ்வாப்பழ மரம்
பிஞ்சுகளையே உதிர்த்தது.
பழங்கள் விழும்போது
பொறுக்கி வைக்கிறேன் சாமியென்ற
அந்தோணியின் வார்த்தைகளை
ஒன்று விடாமல்
அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.
- திருநெல்வேலி, ப.சுடலைமணி

இப்பவும் மனசுக்குள்

அப்பா வாங்கித் தந்த
சுருள் கேப்புத் துப்பாக்கியோடு
ஒருநாள் ராணுவ வீரனாய்
ஊரெல்லாம் சுற்றியது...
அக்கா வைத்துவிட்ட
மருதாணிக் கையோடு தூங்கி
அதிகம் சிவந்தது யாருக்கென்று
செல்லச்சண்டைபோட்டது...
முதன்முதலாய் வாங்கித் தந்த
முழுக்கால் சட்டையை
அழுக்கானபின்னும் கழட்டாமல்
அடம்பண்ணியது...
சாமி கும்பிடுவதற்குள்
அம்மாவுக்குத் தெரியாமல்
பால் பணியாரத்தை
வாய்க்குள் அமுக்கியது...
ஏதோவொரு தீபாவளியன்று
ஆசையாய் அவள் வீட்டில்
அதிரசம் சாப்பிட்டது...
இப்பவும் மனசுக்குள்
அப்படியே இனிக்கிறது.
- புதுக்கோட்டை, காசாவயல் கண்ணன்

x