பெண் எழுத்தாளர்களுக்காக மெனக்கெடும் தனி ஒருத்தி!


நியூயார்க்கில் மிக அரிதான, முக்கியமான புத்தகங்கள் விற்பனை செய்யும் இடத்துக்குச் சென்ற ஏ.என்.டேவர்ஸ் அதிர்ச்சியடைந்தார். ஆண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அனைத்தும் 500 டாலருக்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் 25 டாலருக்கும் குறைவாக விலை குறிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை    வாடிக்கையாளர்கள் அடையாளம் காணும் வகையில் காட்சிப்படுத்தவும் இல்லை. ஆண் எழுத்தாளர்களின் நூறு புத்தகங்களுக்கு நடுவில் ஒரு பெண் எழுத்தாளர் புத்தகம். உடனே முடிவெடுத்தார் டேவர்ஸ். பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களுக்காகவே தனி விற்பனைக்கூடத்தை அமைத்தார். ‘The Second Shelf' என்ற இந்த விற்பனைக்கூடத்தில் பெண் எழுத்தாளர்களின் பல அரிதான புத்தகங்களைச்  சேகரித்து வைத்துள்ளார். அவற்றில் 1813 பதிப்பான ஜேன் ஆஸ்டனின் ‘Sense and Sensibility', 1957 முதல் பதிப்பான பாட்ரிசியா ஹைஸ்மித்தின் ‘The Talented Mr.Ripley', 2012 ல் வெளியான ‘Alice in Wonderland' ஆகிய  புத்தகங்கள் அடங்கும். அனைத்துப் புத்தகப் பிரியர்களும் உதவினால் மட்டுமே தனது இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் டேவர்ஸ்.

கேள்வியாய் அலையும் சொற்கள்

விலை: ரூ.100
வழிப்போக்கன் 
சொல்லாத குறிப்புகள் 
க. அம்சப்ரியா 
கவிதைத் தொகுப்பு 
இருவாச்சி பதிப்பகம்

யாருடைய பூனையென்று ஆராயாமல் குவளை நிறைய பாலூற்ற முனையும் கவிஞனின் மனமே க. அம்சப்ரியாவின் கவி மனம். கவிஞரிடம் நிறைய சொற்கள் உள்ளன. தொகுப்பெங்கும் அவை காணக் கிடைக்கின்றன. பெரும்பாலும் வாசகனுடன் நேரடியாகப் பேசும் கவிதைகள் அதிகம். அதைத் தவிர்த்த பதிவுகளே சிந்திக்க வைக்கின்றன. கவிஞன் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதி முடித்த கவிதைகள் தொகுப்பாய் வரும்போது சந்திக்கும் அதே பிரச்சினையை இத்தொகுப்பும் எதிர்கொள்கிறது. ஒரே விதமான எழுத்து நடையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கவிதைகள் தொடர்ச்சியாய் வருவது அயர்ச்சியூட்டுகிறது. மக்காச்சோளக் கதிரில் ஊஞ்சலாடிய குருவிகள் போன்ற கவிதைகளுக்கு அதிக இடமளித்திருக்கலாம். சிறுமி அதிஸ்யா குறித்த கவிதைகள் சுவாரஸ்யம்.  வெகு சில கவிதைகள் முடிவின்றி முடிந்து விடுகின்றன. வந்தமர்கிறது ஒரு மீன் என்பதில் உணரும் படிம அசவுகரியம் தொல்லை செய்கிறது. ‘யாரும் நடமாடவிடாத இப்பகலின் வீதி இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கிறது’ என்ற வாக்கியங்களில் உள்ள கவியமைப்பு ‘வெயிலோடு’ என்று முடிகையில் கேள்வியாகிவிடுகிறது. தொட்டி மீன்களுக்கு  தினம்  ஒரு கடல்  என்பதே அழகு. ஆனால், வாக்கியச் செறிவின்றி நீள்கிறது கவிதை. நீங்கள் அதை அடையாளம் கண்டுகொண்டால்// போதுமானதுதான்// பிறகது// பிரகடனப்படுத்திக்கொள்ளும்// தன்னையொரு கவிதையென... என்னும் கவிஞர்தான் அடையாளம் கண்டுகொள்ளவிடாமல் கவிதையாகவே அறிவித்து விடுகிறார். சில கவிதைகள் வாசகனுக்கு உணர்த்த விரும்புவது அதைத்தானா எனக் கண்டறிவதற்குள் அது இல்லை என்பதாய் முடிகின்றன. துணுக்கில் கூட சேராத வகையில் வரும் சில விளக்கங்களை கவிதை வரிசையில் காண மனம் வருத்தமுறுகிறது. நான் உங்களின் விதை நெல் என்று முதல் வரியில் அறிவித்துவிட்டு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னை விதைநெல்லென்று ஒப்புக்கொள்வதுதான் என்று கவிதையை முடிப்பது கவிதைக்கும் வாசகனுக்கும் செய்யும் அநீதியல்லவா... கவிதை எல்லாமும் சொல்லலாம். எல்லாவற்றையும் கவிதையே சொல்லிவிட்டால் எப்படி? திசையற்ற ஊரில் வானம் யாவருக்குமானது. அது வாசகனுக்குமானது என்பதில் கவிஞருக்கு ஏனோ நம்பிக்கையில்லை. மிக நல்ல கவிதையாயிருக்க வேண்டிய தூரத்துச் சேவல் விலக்கும் காலத்திரை கவிதை வடிவமைக்கப்பட்ட சம்பிரதாயச் சொற்களினால் அழகியலைத் தொலைக்கிறது. மூன்று பாலைவனங்கள் என்பதை பாலைவனம், பாலைவனம், பாலைவனம் என்று சொல் ஏலம் விடுதல் போன்ற விரயத்தினால் அலுப்பூட்டுகிறது. கேள்விக்குறிகளோடு அலைபவன் என்று தலைப்பிடப்பட்ட கவிதைக்குள் ஏன் அத்தனை கேள்விக்குறிகள்? வழிப்போக்கன் சொல்லாத குறிப்புகளில் சொல்லப்பட்ட குறிப்புகளே அதிகம். 

x