இடமற்ற போதும்...
பொழிந்த மழையில்
நனைந்த சிறகை உலர்த்த
மரத்தின் உச்சி சென்று
தலை கவிழும் மயில்தான்
மேகம் கருமையாகத் திரண்டவுடன்
வண்ணச் சிறகு விரித்து ஆடுகிறது
மேகங்களின் முட்டலில்
எழும் ஒலிக்கு
ஃபேன்... ஃபேனெனக்
குரல் எழுப்பி மகிழ்கிறது
மழையில் ஒதுங்க
இடமற்ற போதும்!
- நூர்சாகிபுரம் துள்ளுக்குட்டி
யாதும் ஊரே
பெருங்கடலில்
சர்வேதேச எல்லை தாண்டி
பின் மாநிலம் கடந்து
ஒரு மலை தாண்டி
இரு நதி கடந்து
என் சிற்றூரில் அவசரமாகப்
பொழிய ஆரம்பித்தது
கார்மேகக் கூட்டம்
எங்கிருந்தோ வருகின்றாய்
திரும்பிப் போவென
யாரேனும் சொல்லிவிடுவதற்குள்.
- தாம்பரம் கார்த்திக் பத்ரி