கே.கே. மகேஷ்
“ஒரு ஆளு இல்லாதது எல்லாருக்கும் எளக்காரமா போச்சுல்ல... அந்தம்மா இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா..?” இப்போதெல்லாம் இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்க முடிகிறது. உண்மையிலேயே இப்போது ஜெயலலிதா இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்? ஒரு கற்பனை.
‘பிக் பாஸ்' வழிநடத்துதலின்றி தமிழ்நாட்டை அதிமுகவே ஆண்டிருக்கும். நீதியரசர் ஆறுமுகச்சாமி ஆணையத்துக்கு வேலையில்லாமல் போயிருக்கும். செல்லூர்
ராஜூவின் விஞ்ஞான அறிவு, திண்டுக்கல் சீனிவாசனின் வெள்ளந்தி மனது எல்லாம் வெளிப்படாமல் போயிருக்கும். “அம்மா சாப்பிட்ட இட்லிகள் எத்தனை?” என்ற உண்மையும் தெரிந்திருக்கும். ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்யத் துணிந்திருக்க மாட்டார். தலைமைச் செயலகத்தில் சிபிஐ ரெய்டு நடந்திருக்காது. மீறி நுழைந்த சிபிஐ அதிகாரிகளைக் கைது செய்து ஒரு நாள் ஒரு இரவேனும் புழல் சிறையில் அடைத்து ‘சாவு பயத்தைக்’ காட்டியிருப்பார் புரட்சித் தலைவி. ‘குட்கா’வுக்காக கொமட்டில் குத்து வாங்கி விஜயபாஸ்கர் இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பார்!
தலைமைச் செயலகத்துக்கு அவ்வளவு துணிச்சலாக வெங்கய்ய நாயுடு வந்திருக்க மாட்டார். ஒருவேளை வந்திருந்தாலும் தமிழக அரசு கோப்புகளை ஆய்வு செய்திருக்க மாட்டார். காவிரி பிரச்சினையின்போது, ‘பிரதமரைச் சந்திக்க நேரம் தரவில்லை' என்று தலையைத் தொங்கவிட்டுக்கொண்டே முதல்வர் தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கும் அவலம் ஏற்பட்டிருக்காது. தமிழக முதல்வரின் கோரிக்கை மனுவை போயஸ் கார்டன் வீட்டுக்கே வந்து வாங்கிக்கொண்டு காத்திருந்து, ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டுப் போயிருப்பார்கள் மத்திய கேபினெட் அமைச்சர்கள்.