நேரலையில் உலகப் பிரபல ஓவியம்


ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜிக்ஸ் அருங்காட்சியகம் உலகப்புகழ்பெற்ற ஓவியங்களைப் புதுப்பிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. இதில், 1642-ல் புகழ்பெற்ற ஓவியர் ரெம்ப்ராண்ட் வான் ரிஜின் வரைந்த ‘தி நைட் வாட்ச்’ என்ற ஓவியமும் அடக்கம். இந்த ஓவியம் புதுப்பிக்கப்படுவதை உலகம் முழுவதுமுள்ள அனைவரும் நேரலையில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது இந்த அருங்காட்சியகம். இந்த ஓவியம் புதுப்பித்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்களும், டெல்ப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் ஈடுபடவுள்ளன. இந்தப் புதுப்பித்தல் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்றும், இணையத்தில் நேரலையாகவும் பார்க்கலாம் என்று அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெருடல் இல்லாத இலக்கியம்

கணேசகுமாரன்

தனிச் சுற்றுக்கு மட்டும் என்றாலும் மாத இதழாகவே தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது முள் சிற்றிதழ். கவியோவியத் தமிழனை ஆசிரியராகக் கொண்டு திண்டுக்கல்லிலிருந்து வெளிவரும் முள் இதழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் இடம் பெற்றுள்ளன. இதழின் சிறப்பம்சமே உள் வடிவமைப்பும் கவிதை, கதைகளுக்கான ஓவியங்களும்தான். தீவிர இலக்கியத்துக்கான பார்வையை வடிவமைப்பும் ஓவியங்களுமே தந்து விடுகின்றன. ஒரு கவிதையை கதையை உள் வாங்குவதற்கு அது கூடுதலான வசதியைத் தந்துவிடுகிறது. சிற்றிதழ் தரத்துடன் படைப்புகள் தங்கள் பங்களிப்பை வழங்க, புத்தக வடிவமைப்பில் 6 பக்கங்களில் வரும் பாரதி நிவேதனின் நீள் கவிதையான எதிரிகளின் நடனம் சற்றும் எதிர்பாரா இலக்கிய அனுபவத்தைத் தருகிறது. அதிலும் ஒவ்வொரு வரியிலும் தனித்தனியாகத் தென்படும் புதிதான படிமங்கள் கவிதை ரசனையை உயர்த்துகிறது என்பதே நிஜம். புதியவர்களின் கவிதைகளும் கதைகளும் மிகுந்த நம்பிக்கை தருவதாய் உள்ளன. தேர்வுசெய்த ஆசிரியர் குழுவுக்குப் பாராட்டுகள். எளியவர்கள் மூலம் வெளிவரும் இதழ் என்றாலும் அச்சுத் தரத்திலும் படைப்புத் தேர்வுகளிலும் கறாராய் இருப்பது கவனத்துக்குரியது.
ஏ. நஸ்புல்லாஹ், கோ. சாமானியன், கலை இலக்கியா, புதிய மாதவி போன்றவர்களின் கவிதைகளாகட்டும் செஞ்சி தமிழினியன். கனிமொழி எம். வி, அண்டனூர் சுரா ஆகியோரின் கதைகளாகட்டும் எல்லாமே சிறப்பாய் உள்ளன.முள் என இலக்கியச் சிற்றிதழுக்குப் பெயர் வைத்திருந்தாலும் நெருடல் ஏதுமின்றி தன்னளவில் தரமாக இயங்கும் இதழின் அடிக்குறிப்பாய் இடம் பெற்றிருக்கும் பாதைகளைக் கவனிக்க என்ற வார்த்தைகள் இதழ் குழுவுக்கு மட்டுமல்லாது வாசகருக்கும் சொல்லும் செய்தியாகும். நவீன இலக்கியத்துக்கான தளம் என்பதால் புரியா வார்த்தைகளில் பெரிதாய் கவிதை எழுதாமல் வெகுஜன வாசகருக்கும் எட்டும்படி எழுத்து இருப்பது மகிழ்வைத் தருகிறது. விலை அதிகம் என்பது மட்டுமே குறையாய் உள்ளது. தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற இடத்திலிருந்து மாறி வெகுஜன மக்களின் கைகளில் தவழும் முறையில் இதழ் இயங்கும்போது விலை குறைய வாய்ப்புண்டு. வண்ணமயமானஅட்டைப்படத்துடன் வெளி வந்திருக்கும் முள் சிற்றிதழ் தொடர்ந்து இலக்கிய வெளியில் இயங்கிட வாழ்த்துகள்.

x