18-ம் நூற்றாண்டில் வரைந்த டூடில்


கூகுளின் டூடில் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கூகுள் அதன் எழுத்துகளில் பிரபலமான ஆளுமைகளையோ, அல்லது நிகழ்வுகளையோ பதிவுசெய்து கொண்டாடும். ஆனால், இந்த டூடில் வரையும் பழக்கம் 18-ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறது இங்கிலாந்து கிராமப்புற வாழ்வியல் அருங்காட்சியகம். 1784-ல் ரிச்சர்ட் பீல் என்ற 13 வயது சிறுவன் தன்னுடைய கணிதப் பாட கையேட்டில் ட்ரவுசர் போட்ட கோழியை வரைந்திருக்கிறான். இதுமட்டுமல்லாமல் இன்னும் சில டூடில்களையும் கையேட்டில் வரைந்திருக்கிறான். அவற்றை இந்த அருங்காட்சியகம் சேகரித்து கடந்த வாரம் காட்சிக்கு வைத்ததோடு சமூக வலைதளத்திலும் வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானதோடு ஹாரி பாட்டர் எழுதிய ஜேகே ரோலிங் உள்ளிட்ட பலரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ‘The adventures of a chicken who wears trousers’ என்ற தலைப்பில் அடுத்த நாவலை எழுதப் போவதாகவும் ஜேகே ரோலிங் கூறியிருக்கிறார்.

மரபை மீறி மிரட்டும் கவிதைகள்

தொகுப்பின் தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே போனால் பேரதிர்ச்சி அளிக்கிறார் எழுத்தாளர் வா. மு. கோமு. அவரின் வழக்கமான நையாண்டிகளோடு தீவிர அரசியல் பேசுகின்றன கவிதைகள். அதிலும் எவ்வித ஒளிவுமறைவுமில்லாமல் நேரடியாகச் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தொனியில். மோடி, ரஜினிகாந்த், எட்டு வழிச் சாலை, சாயக்கழிவு, ஆழ்துளைக் கிணறுகள், பெட்ரோல் விலையேற்றம் எல்லாம் இவரின் கவிதைகளில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அதே சமயம் அவரின் ட்ரேட்மார்க்கான குறும்புத்தனங்களுக்கும் குறைவில்லை. ’பரிசுகள்’, ’தெரியாக் கவிதை’ கவிதைகள் வழியே இலக்கிய விருதுகளைச் செய்யும் கேலி ஒருபுறம். நிறைவேறாத ஒற்றைத்தட காதலின் முடிவாய் எழுதிப்போகும் ’அவள் நினைவாக’ கவிதை கூறும் உண்மை ஒருபுறம்... என மனிதர் எதிலும் சளைக்காமல் நின்று ஆடியிருக்கிறார். சில கவிதைகள் அதன் வடிவமைப்பைத்தாண்டி ஒரு சிறுகதைக்கான வேண்டுகோளாக நிற்கின்றன. ஆயிரம் குறிகள் கவிதை ஏற்கெனவே படித்த சிரிப்புக் கதையொன்றை ஞாபகப்படுத்துகிறது. தவிர்த்திருக்கலாம்.
வா. மு. கோமுவின் சிறந்த சிறுகதைத் தொகுப்பான மண்பூதத்தை நினைவுபடுத்தும் பச்சையம், கடலைக் களவாடியவன் கவிதைகள் மேஜிக்கல் ரியலிசத்தின் அழகியல். அவரே ஒரு கவிதையில், ‘சோகக் கவிதைகள் சோத்துக்காவுமா’ என்று கேட்பதுபோல் தொகுப்பில் காதல் துயரம் பேசும் கவிதைகள் தென்படவில்லை. அப்படிப்பட்ட கவிதைகளையும் தன்னளவில் எளிதாக்கிவிடுகிறார். கவிதையே மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்க சில கவிதையின் ஒரு வரி ஒட்டுமொத்த உணர்வையும் சொல்லிப்போகிறது. // இவன் உயிர் மிஸ்டுகால் தரும் தருணங்களில் இவன் அலைபேசியில்அஞ்சு பைசா இருப்பதில்லை// சற்றே உலுக்கும் வரி. சுறா என்ற கவிதை பத்து பக்கங்களுக்கு மேலாய் விரிய வேண்டிய பெருங்கதை. காதலியைச் சந்தித்தல் கவிதையை தோற்றுப்போன எல்லா காதலர்களுக்கும் கிரீட்டிங் கார்டாய் அனுப்பலாம். வாசிக்கையிலேயே திடுக்கென யோசிக்க வைக்கிறது நான்கு கால் நாய், தாடி வைத்த பெண் சாமியார் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள். கவிதைகளையெல்லாம் வாசிக்கும்போது ஒருபக்கம் இவையெல்லாம் வழமையான கவி உலகத்தைப் பகடி செய்வதற்காகவே எழுதப்பட்டவை என்று தோன்றினாலும் ஒரு கவிதையாக வாசகருக்கு என்ன தர வேண்டுமோ அந்த விதத்தில் இத்தொகுப்பு வெல்கிறது எனலாம்.

-கணேசகுமாரன்

x