இரவின் பசுமை!
மிதமான வேகமான அதிவேக நடையுமாக
எனது பள்ளிவளாகத்தைக் கடக்கும்போதெல்லாம்
பால்ய சிநேகிதியின்
வாய்ப்பாட்டு வெளியாய் ஒலிக்கும்
’ஒம்பத்தொம்போது எம்பத்தொண்ணு’.
அன்றிரவின் பசுமையைக் கலையும்
படுக்கையில் புரளும் மகளின்
‘ரெயின் ரெயின் கோஎவே’!
- வில்லிப்புத்தூர் ஞானேஸ்வரி
செல் பசி!
நகரப்பேருந்தில்
விசில் சத்தத்தையும் தாண்டி
ஒலிக்கிறது குழந்தையின் அழுகுரல்.
கூட்ட நெரிசலின் காற்றுக் குறைவா
பாட்டிவீட்டு நாய்க்குட்டி நினைப்பா
பெற்றவளுக்கும் புரிபடவில்லை.
ஹெட்செட்டுகளில் அடித்தொண்டையில்
கத்திக்கொண்டிருந்த அனிருத்தையும் தாண்டி
காதைக் கிழிக்கிறது கூக்குரல்.
கருவாட்டுக் கிழவி
உதட்டைக் குவித்து நாக்கைச் சுழற்றி
லுலுலுலாயி சொல்லிப் பார்த்தாள்.
பால்பாட்டில், கிலுகிலுப்பை
பிஸ்கட்டுகளென எதைக் கொடுத்தாலும்
எட்டி உதைத்தது குழந்தை.
கையைப் பிசைந்த அம்மாக்காரி
பையில் இருந்து எடுத்து
குழந்தையின் கையில் திணித்ததும்
அழுகை அடங்கியது
குழந்தையின் செல்பசி!
- காசாவயல் கண்ணன்