டீன் ஏஜ் மனநிலையை ஆராயும் புத்தகம் 


உலகம் முழுவதுமுள்ள எல்லா பெற்றோர்களும் சந்திக்கும் மிகப்பெரிய சவால், டீன் ஏஜில் உள்ளவர்களைப் புரிந்து கொள்வதும், அவர்களை எப்படி அணுகுவதும் என்பதும்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பே, டீன் ஏஜ் வயதில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல என்று எழுதியிருக்கிறார் தத்துவ மேதை சாக்ரட்டீஸ். இப்போதும் இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான சாரா ஜேன் பிளேக்மோர். ’Inventing ourselves: the secret life of the Teenage Brain' என்ற இந்தப் புத்தகம், டீன் ஏஜில் உள்ளவர்களின் உணர்வுரீதியான சமநிலையின்மை, நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், ரிஸ்க் எடுக்கும் தன்மை எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்கிறது. அறிவியல் தொடர்பான புத்தகங்களுக்கு வழங்கப்படும் ராயல் சொசைட்டி பரிசு இந்த ஆண்டு இந்தப் புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடத்தில் இப் பரிசைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் இவர். பரிசுக்கான தேர்வுக்குழு “இது அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்” என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்து போகும் கவிதைகள்

நகைச்சுவை, துணுக்குகள் எழுதிக்கொண்டிருந்த வலங்கைமான் நூர்தீனின்  கவிதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது ’பாகன் திரும்பும் வரை’.  இது இவரின் இரண்டாவது நூல். 112 பக்கங்களிலும் பல துணுக்குகளாகவும், நிலைத்தகவல்களாகவும் கடந்து போகின்றன கவிதைகள். மனநிலை பாதிக்கப்பட்டவன் , சாமானியர்களின் கண்களுக்கு எப்போதும் பைத்தியம்தான். ஆனால், யார் பைத்தியம் என்பதைக் கூறிப்போகும் ’இப்போதும் அவன்’  கவிதை நூலாசிரியரின் மனிதாபிமான அக்கறையைக் காட்டுகிறது. அதே சமயம் மனநலம் பிறழ்ந்தவளை வன்புணர்வு செய்து திரும்பும் ஒருவன் இவரின் பார்வையில் எப்படி நல்லவனாகிறானென்று தெரியவில்லை. 

நூலாசிரியரின் பிரச்சினையே காணும், தோன்றும், வாசிக்கும், கேள்விப்படும் அனைத்தையும் எழுதத் துடிப்பதுதான்.  மீத்தேன் அரசியல், விவசாயிகளின் வாழ்வாதாரம் பற்றிய பதிவுகளில் வலியுடன் சில கவிதைகள் தென்படுகின்றன. முதல் கேள்வியும் கடைசி பதிலும்  போன்ற கவிதை அபூர்வமாய் தொகுப்பில் கிடைக்கிறது. கண்ணாடித் தொட்டிக்குள் நீந்தும் மீன், உயிரற்ற நெகிழித் தவளையின் செயற்கை சுவாசம் என்றெல்லாம் படிமங்களின் மூலம் வாழ்வை எழுதிப்போகும் நூலாசிரியர் பல அபூர்வமான கணங்களை வெறும் செய்திப்பத்தியாகவே வாசிக்கத் தருகிறார். ’அவளின் கோப்பை’ கவிதையின் கடைசி வரி நீக்கியிருந்தால் தொகுப்பின் சிறந்த காதல் கவிதையாகி இருந்திருக்கும். ’மாதமொருமுறை’ கவிதையின் கடைசி வரி விளக்கத்தை வாசகருக்குத் தரும் அளவுக்கா வாசிப்பனுபவம் இருக்கிறது?  ’சாயல்’ கவிதையில் வரும் விலைமாது தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் தன் மகனின் சாயலைத் தேடுவதாக எழுதியிருப்பது அபத்தம். அதேபோல் குடும்பத் தலைவன் என்றொரு கவிதையும்.  

x