என்றென்றும் ஏழுமலையான்! 9: நாதம் எம் ஜீவனே...


அலங்காரப் பிரியனான அந்த சப்தமலையரசனை எந்நாளும் திருநாட்களில் நாதஸ்வர இசையால் தாலாட்டுப்பாடுபவர்கள் காசிம் - பாபு சகோதரர்கள். பிறப்பால் இஸ்லாமியர்களான இவர்களது இசை மீதான பக்தி மதங்களைக் கடந்ததாகும். அதனால்தான் பிரசித்திபெற்ற இந்து திருத்தலமான திருமலை திருப்பதியில் 23 ஆண்டுகளாக ஆஸ்தான வித்வானாக இருக்கிறார் காசிம்.

ஏழுமலையானுக்கு இந்துக்கள் பலரும் பல வழிகளிலும் தன்னார்வ சேவையாற்றி வருகிறார்கள். ஆனால், மதங்களைக் கடந்த ஒரு ஈர்ப்பையும் பக்தியையும் காசிமிடம் நாம் பார்க்கலாம். கடந்த 23 ஆண்டுகளாக பிரம்மோற்சவ நாட்களில் இவரது நாதஸ்வர இசை இல்லாமல் உற்சவரின் வாகனம் புறப்பட்டதே இல்லை.
சிறிதும் களைப்படையாமல்...

பிரம்மோற்சவத்தின் போது, உற்சவரான மலையப்பர் தினமும் காலையும் இரவும் பல்வேறு வாகனங்களில் நான்கு மாட வீதிகளையும் சுற்றிவருவார். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் போது சுமார் 6 லட்சம் பக்தர்கள் திருமலையில் இருந்தார்கள். பிரம்மோற்சவத்தின் போது தினமும் வாகன மண்டபத்தில் இருந்து மலையப்பர் எழுந்தருளி உலா வருவார். அப்போது நம் காதுகளுக்கு இனிமையான நாதஸ்வர இசை காற்றோடு கலந்து வரும். சுவாமியின் வாகன சேவை புறப்படும் போது மல்லாரியில் கம்பீர நாட்டை வாசிக்கப்படுகிறது. அப்போது சுவாமி கம்பீரமாக பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். அதன் பின்னர், அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள், நிவாச திருவேங்கடமுடையானே, ஓம் நமோ நாராயணா ஆகிய பாடல்கள் நாத வடிவில் நமது காதுகளில் ரீங்கரிக்கும். ஏழுமலையான் பவனி வரும் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான நடையில் இங்கு நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது.

தேர்த்திருவிழாவின் போது தேர் மல்லாரி, தெப்ப உற்சவத்தின் போது ஓடம் மல்லாரி, நைவேத்தியம் சமர்ப்பிக்கும் போது தளிகை மல்லாரி, யாக பூஜைகளின் போது கலச மல்லாரி என விதவிதமான நாத இசையை திருமலையில் கேட்கலாம். பிரம்மோற்சவத்தில் இந்த நாதஸ்வர இசையை காசிமும் அவரது சகோதரர் பாபுவும் மிகவும் பக்தி சிரத்தையோடு வாசித்துக் கொண்டே மலையப்பரின் வாகனத்துக்கு முன்னே நடந்து வருகிறார்கள். வாகன சேவையில் பங்கேற்கும் விஐபி-க்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருவித மரியாதையுடன் அவர்களைப் பார்த்து வணங்கிச் செல்கின்றனர். சிறிதும் களைப்படையாமல், வாகன மண்டபத்தில் சுவாமி புறப்பாடு தொடங்கியது முதற்கொண்டு, மாடவீதிகளைக் கடந்து சுவாமி மீண்டும் வாகன மண்டபத்தில் நிலை கொண்ட பின்னரும் இவர்களது நாத இசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அதன் பிறகும், வாகனத்தில் இருந்து உற்சவர்களை கோயிலுக்குள் கொண்டு செல்லும் போதும் இவர்களது மங்கள இசை விடாமல் முழங்குகிறது.

சுவாமி சன்னிதியின் அருகே தேவஸ்தான விடுதி ஒன்றில்தான் தங்கியிருக்கிறார் காசிம். பக்தர்களால் மரியாதையுடன் வணங்கப்படும் காசிம் அதற்கான கர்வம் கொஞ்சமும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கிறார். “எங்களுக்குப் பூர்வீகம் ஆந்திராதான். பிரகாசம் மாவட்டம் கரவதி கிராமம்தான் எங்களுடைய மூதாதையர் வாழ்ந்த ஊர். இப்போதும்கூட எங்களது உறவினர்கள் சிலர் அங்கே இருக்கிறார்கள். நாதஸ்வரத்தில் எங்களது குடும்பம் 300 வருட பாரம்பரியம் கொண்டது. கரவதி கிராமத்தில் இப்போதும் சிவன் கோயிலும், வேணு கோபால சுவாமி கோயிலும் உள்ளது. இங்குதான் எங்களது மூதாதையர்கள் நாதஸ்வரம் வாசித்து வந்தார்கள். அப்போது ஊதியமெல்லாம் கிடையாது. ஜமீன் காலம் என்பதால் நில மானியம் மட்டும்தான். இப்போதும் எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கோயில்களில் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள்” என்கிறார் காசிம்.

ஷேக் சின்ன மவுலானாவின் பேரன்

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல நாதஸ்வர வித்வானான ஷேக் சின்ன மவுலானா காசிமின் தாய்வழி பாட்டனார். காசிமுக்கு குருவும் அவர்தான்! இதைப் பெருமையாகச் சொல்லும் காசிம், “தாத்தா காலம் நாதஸ்வரத்தின் பொற்காலம். அவர் சென்று வாசிக்காத நாடே இல்லை, வாங்காத விருதே இல்லை. அந்த அளவுக்கு நாதஸ்வர இசையை உலக அரங்கில் கொண்டு சென்றார். 1970 முதல் தொடர்ச்சியாகப் பத்தாண்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தாத்தா நாதஸ்வரம் வாசித்தார். அவரிடம் சிறு வயது முதலே நாதஸ்வரம் படித்த நான், அவரோடு பல கச்சேரிகளுக்கு உடன் சென்று வாசித்துள்ளேன். இதனால், அவருக்குப் பிறகு எனக்குத் திருப்பதி தேவஸ்தானத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது திறமையை அங்கீகரிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் என்னைக் கடந்த 1996-ல்,
திருமலையின் ஆஸ்தான வித்வானாக அறிவித்தது. ஏழுமலையானுக்காக அன்று தொடங்கிய எனது இசைப்பயணம் இப்போது வரை தொடர்கிறது. எனது ஆயுள் உள்ளவரை இது நிற்காது” என்கிறார்.

காசிம், திருமலை திருப்பதியின் ஆஸ்தான வித்வானாக வந்த பிறகு இங்கு நடக்கும் முக்கிய விழாக்களில் இவரும் இவரது சகோதரர் பாபுவும் நாதஸ்வரம் வாசித்து வருகிறார்கள். தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்காகவும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் காசிம். திருமலையில் மட்டுமின்றி, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம், ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர் கோயில் பிரம்மோற்சவங்களுக்கும் காசிம் சகோதர்களின் இசை முழக்கம்தான். திருப்பதியில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று இசை சேவை புரிந்துள்ள காசிம், அமெரிக்காவில் திருப்பதி தேவஸ்தானத்தினர் நடத்தியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்யாண மஸ்து நிகழ்ச்சிகளிலும் ஆஸ்தான வித்வானாகப் பங்கேற்று நாதம் வாசித்துள்ளார். இவரது கலைச் சேவையை மெச்சும் விதமாக தமிழக அரசு 2002-ல் இவருக்கு ‘கலைமாமணி’ பட்டம் வழங்கிக் கவுரவித்தது.

இசைக்கு சாதி, மதம் இல்லை!

இதையும் தனது இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லி சிலாகிக்கும் காசிம், “ஒருமுறை பிரம்மோற்சவத்தில் கருட சேவையின் போது மாட வீதியில், வாகன சேவை வந்து கொண்டிருந்தது. நான் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு வந்தேன். அப்போது, தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரமணாச்சாரி என்னை நிறுத்தி பொன்னாடை போர்த்தி, ‘உங்களது சேவை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு என்றைக்கும் தேவை’ என்று சொல்லி வாழ்த்தினார். பல்லாயிரக்கணக்கானோர் நேரிலும் தொலைக்காட்சி வழியாகவும் அந்த நிகழ்வைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினர். அதுபோல இன்னொருமுறை, நிர்வாக அதிகாரியாக இருந்த சாம்பசிவ ராவ், எனக்கு சேஷ வஸ்திரங்களை வரவழைத்துப் பரிசளித்துப் பாராட்டினார். இதெல்லாம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வுகள்” என்கிறார்.

“நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு இந்துக் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதால் சங்கடங்கள் ஏதும் ஏற்படவில்லையா?” என்று அவரைக் கேட்டதற்கு, “சார், இசைக்கு சாதி மதமெல்லாம் கிடையாது சார். இசை என்பது ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கியது. அதை யார் வாசித்தாலும் ஏழு ஸ்வரங்களுக்குள்தான் வாசிக்க வேண்டும். சாதி, மதம், இனம், மொழி, நாடு, இந்த எல்லைகளை எல்லாம் கடந்தது இசை. மனப்பூர்வமாக அப்படி நினைத்துத்தான் இசையை நாங்கள் போற்றுகிறோம்” என்றார்.

(முகங்கள் வரும்...)

x