அகதிகளுக்காகப் பேசும் கடல் பிரார்த்தனை


ஆப்கன் அமெரிக்க எழுத்தாளரான காலித் ஹொசீனியின் அடுத்த நாவல் வெளியாகியிருக்கிறது. தொழில் ரீதியில் மருத்துவரான இவர், தனது முதல் நாவல் ‘தி கைட் ரன்னர்' மூலம் உலகப் புகழ் பெற்றார். சமூகத்தால் அழுந்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான எழுத்துகள் இவருடையது. இதுவரை மூன்று நாவல்களை எழுதியிருக்கும் இவரது நான்காவது படைப்பு ‘கடல் பிரார்த்தனை'. 44 பக்கம் மட்டுமே உள்ள இந்த நாவல் அகதிகள் வலியைப் பற்றி பேசுகிறது.

நூலரங்கம்: உயிர் தரும் ‘உயிர்'

சுற்றுச் சூழல் ஆர்வலரும் கானுலகப் புகைப்படக்காரரருமான ஏ. சண்முகானந்தம் ஆசிரியராகச் செயல்பட இரு மாத இதழாக வெளிவருகிறது உயிர் சிற்றிதழ். முழுக்க முழுக்க இயற்கை ஆர்வலர்களுக்கான இதழாக இருந்தாலும் எல்லோரும் வாசித்துப் பயன் பெரும் அளவுக்கு இதழ் தயாரிக்கப்படிருக்கிறது. அடிப்படையில் இதழ் ஆசிரியர் புகைப்படக்காரர் என்பதாலே, இதழில் புகைப்படங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்துப் பக்கங்களில் சொல்ல வேண்டிய செய்தியை ஒரு புகைப்படம் அநாயசமாய் விளக்கிவிட்டுப் போகிறது. காட்டு உயிர்கள் பற்றிய கட்டுரை என்றாலும் சுவாரசியமிக்க நடையில் கதை சொல்லல் பாணியில் முயன்றிருப்பதும் அழகு. தரமான தாள், நேர்த்தியான அச்சாக்கம் , பளபள வடிவமைப்பு எவ்வித உறுத்தலுமின்றி வாசகரை ஈர்க்கிறது. வாழை மரம் குறித்த அரிய தகவல்களை அறியும் அதே தருணம் தபநுளி ஒரங்குட்டான் என்ற எட்டாவது மனிதக் குரங்கினத்தைப் பற்றிய தகவலும் தென்படுகிறது.
பள்ளி மாணவ மாணவிகளுக்கும் புரியும் வகையில் ஒவ்வொரு கட்டுரையும் அறிமுகம், விளக்கம், முடிவு எனத் தனித்தனியே வந்திருப்பது கூடுதல் சிறப்பு. வண்ணமயமாக அழகாக கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி
ப்ரேம் செய்து மாட்டிக்கொள்ளும்படியான முன் பின் அட்டைப்படங்கள் இதழுக்கு நம்பிக்கை தரும் ஒன்று. இரண்டு இதழ்கள் வெளிவந்திருக்கும் நிலையில் வள அறிஞர்கள் குழுவில் பல ஆளுமைகள் இடம் பெற்றிருப்பதால் அடுத்தடுத்த இதழ்களில் அவர்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கலாம். விலை சற்று அதிகம் என்பது ஒரு குறை. ஆனாலும் இதழ் முழுவதும் வாசித்து முடித்தபின்பு நாம் இயற்கையில் என்னவெல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்று ஏற்படும் குற்ற உணர்வுக்கு முன்னால் இதழின் விலை அதிகமில்லை. தனி நபர் சந்தாவினால் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும் உயிர் போன்ற இதழ் முயற்சிக்கு யாவரும் ஆதரவு தரலாம். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள் சண்முகானந்தம்.

-கணேசகுமாரன்

x