ஆறடி உயரம், முட்டைக்கண்ணு, கிடா மீசை, வாயில வெத்தலைக் குதப்பல்னு சுடுகாட்டுல இருந்து கௌம்பிவந்த சுடலைமாடசாமி மாதிரி இருப்பாரு வெடிக்காரரு. அவர் வீதியில வந்தா பிள்ளைங்க எல்லாம் தெறிச்சி ஓடும். தவறி ஏதாவது சின்னப்பிள்ளை சிக்கிட்டா, நாக்கத் துருத்தி, கண்ணை உருட்டி பயமுறுத்துவாரு. அது 3டி பேய் படத்தை குளோஸப்ல காட்டுற மாதிரி இருக்கும். அப்படியும் அழாட்டி, “ரெட்டைச்சடை... கொண்டை முடி...” என்று அவரே இயற்றிய பேய்ப்பாட்டை கர்ண கடூரமான குரலில் பாடுவாரு. நானெல்லாம் அந்தப் பாட்டைக்கேட்டு கால் வழியே உச்சாவே போயிருக்கேன். சில பிள்ளைங்கள காதைப்பிடிச்சி நாய்க்குட்டிய தூக்குறது மாதிரி தூக்கிடுவாரு. “ஒழுங்கா சாப்பிடல வெடிக்காரர்கிட்ட பிடிச்சிக்குடுத்திடுவேன்”னு சொல்லித்தான் தாய்மார்கள் எல்லாம் பிள்ளைய மிரட்டுவாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அந்த கேரக்டர் எல்லாம் சிட்டியில நடமாடுச்சுன்னா, குழந்தைகள் வன்கொடுமைச் சட்டத்துல உள்ள தள்ளிடுவாங்க.
ஹாஸ்டல்ல படிச்சப்ப நண்பன்ங்க ரெண்டுபேரு இருந்தாங்க. ஒண்ணாம் நம்பர் பயந்தாங்கொள்ளிங்க. ஒருத்தன் தன்னோட பெட்டிக்குள்ள ஒரு குட்டிச்சாக்கு நிறைய விபூதி வெச்சிருப்பான். சினிமாவுல கொலையானவங்களைச் சுத்தி போலீஸ்காரங்க வெள்ளைச் சாக்பீஸால படம் வரைவாங்க பாருங்க, அதேமாதிரி ராத்திரி தன்னோட பாயைச் சுத்தி அவனே விபூதிக்கோடு போட்டுக்கிட்டுத்தான் தூங்குவான். எறும்பு சாக்பீஸ் சரியா போடலைன்னா, உள்ளே எறும்பு புகும் பாருங்க, அந்த மாதிரி சில நேரங்கள்ல விபூதிக்கோட்டையும் தாண்டி பேய்க்கனவு வந்திடும் அவனுக்கு. இன்னொருத்தன் பேரு ஸ்டீபன். அவன் பெட்டிக்குள் ஒரு ஏசு படம் இருக்கும். அதன் கீழே, ‘ஸ்டீபன், நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் - ஏசாயா 41:10’ என்று எழுதி வைத்திருப்பான். பைபிள் வசனத்துலேயே தன்னோட பேரைச் சேர்த்துக்கிட்ட மகா கெட்டிக்காரன் அவன். பாக்கெட்டில் நிறைய மெழுகுத்திரி வெச்சிருப்பான். தினமும் இரவில் தூங்கும் முன்பு ஒரு மெழுகுத்திரி ஏற்றாமல் படுக்கப் போக மாட்டான். நடு ராத்திரியில் காற்றடித்து மெழுகுத்திரி அணைந்துவிட்டால், “பிதாவே, நான் செய்த பாவமென்ன?” என்று மறுநாள் மன்றாட ஆரம்பித்துவிடுவான்.
எங்க ஹாஸ்டல் வார்டன், பி.டி. வாத்தியார் மாதிரி கம்பீரமா இருப்பார். ஆனாலும், ஒரு வீக்னஸ். கிரீச் சத்தம் பிடிக்காது அவருக்கு. தரையில் பென்சிலையோ, கத்தியையோ தீட்டினால் போதும், உரசினால் போதும், 32 பற்கள் மட்டுமல்ல, உடம்பில் உள்ள 206 எலும்புகளும் கூச ஆரம்பித்துவிடும் அவருக்கு. “நிறுத்துடா... நிறுத்துடா”ன்னு அலற ஆரம்பித்துவிடுவார். தெர்மாகோல் சீட்டை பிளேடால் அறுக்கும்போது ஒரு சத்தம் வருமே, அதைக்கேட்டால் டிவி விளம்பரத்தில் எதோ மெஷினைப் போட்டதும் எலியும், கரப்பான்பூச்சியும் வீட்டைவிட்டே ஓடுமே அப்படி ஓடிப்போய்விடுவார். ஸ்டடி ஹாலில் போரடித்தால், பசங்களுக்கு இதுதான் விளையாட்டு.
நண்பனின் அப்பா வேற மாதிரி. எப்போது கடைக்குப் போனாலும் பொண்டாட்டி, பிள்ளைகளுக்குப் பிடிக்காததைத்தான் வாங்கிவருவார். உதாரணமாக சீதாப்பழம் வாங்கிவந்து, சாப்பிடு சாப்பிடு என்று எல்லோரையும் துன்புறுத்துவார். யாரும் சாப்பிட மாட்டார்கள். உடனே திட்டிக்கொண்டே மொத்தத்தையும் அவரே காலி செய்வார். ஒருநாள் இப்படித்தான் ஒன்றரை கிலோ நண்டு வாங்கிவந்து, மனைவியைச் சமைக்கச் சொன்னார். அருவெறுப்புடன் அந்தம்மா சமைத்துக்கொடுக்க, பிள்ளைங்களும் சாப்பிட மறுக்க, “ச்சே... பிள்ளைங்களா நீங்க? இனிமே உங்களுக்கு நண்டே வாங்கித்தர மாட்டேன். பூராத்தையும் நானே சாப்பிட வேண்டியதிருக்கு” என்று தனியாவே மொக்கினார். “நாங்க எப்பய்யா உன்கிட்ட நண்டு கேட்டோம்” என்று பிள்ளைகள் கேட்டதுக்கு கைய ஓங்கிட்டு அடிக்க வந்த அந்த மனிஷன், மறந்தும்கூட பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தர மாட்டார்.