நிழற்சாலை


ரயில் நிலையத்துப் புறாவொன்று...

தயக்கம் ததும்பும் நடை
கழுத்து மினுங்கத் தலையசைப்பு
மிரண்டுருளும் விழிப்பந்து
கொஞ்சம் மௌனம்
அதன்பின் மென்செருமல்
பேரொலிக்குப் படபடப்பு
பெருநகரத்து இளைஞனின்
கிராமத்து இணையென
நடைமேடையில் திரிகிறது
ரயில் நிலையத்துப் புறாவொன்று!
- தஞ்சை, தக் ஷன்

இதனால் சகலமானவர்களுக்கும்...

இடியோசையை வென்று விடுகிறது
பூ மலரும் சப்தம்.
கருடனுக்கு மேலே பறக்கிறது
பையன் விடும் பட்டம்.
அசைந்து அசைந்து நடக்கும்
யானையைக் கடந்து பறக்கிறது பட்டாம்பூச்சி.
தடதடக்கும் புல்லட்டைத் தாண்டி
நொங்கு வண்டி ஓட்டுகிறான்
கிராமத்துச் சிறுவன்.
முரட்டு மீசை தாத்தாவின்
கன்னத்தில் அறைகிறது
பேரனின் பிஞ்சு விரல்.
கனத்த புத்தகங்களின் தத்துவங்களைப்
புறந்தள்ளி பேசப்படக்கூடும்
நல்ல கவிதையின் ஒரு வரி!
- அறந்தாங்கி, ஜீவி

x