விபரீதமாகும் விநோத கலை
கலை எப்போதும் ரம்யமான இனிமையான அனுபவத்தை மட்டுமே தருவதில்லை. சில நேரங்களில் அவை விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு கலைதான் ‘Descent into Limbo'. அதாவது நிஜமாகவே ஒன்றை வடிவமைப்பது. உதாரணத்துக்கு கருந்துளை (Black Hole), விரிசல் உள்ள தரை ஆகியவற்றைச் சொல்லலாம். இங்கெல்லாம் இவற்றை தத்ரூபமாக வரைந்துதான் பார்த்திருக்கிறோம். இந்த நவீன கலை முதன்முதலில் 1992-ல் தான் காட்சிப்படுத்தப்பட்டு பரவலாக அறியப்பட்டது. இதில் சிக்கல் என்னவென்றால் பார்வையாளர்கள் இந்தக் கலையை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதைப் பரிசோதித்துப் பார்க்க ஆசைப்பட்டு சிராய்ப்புகள், காயங்களுடன் வீடு திரும்பும் விபரீதம் இருப்பதுதான். சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். இப்படிச் சமீபத்
தில் அனிஷ் கபூர் என்பவர் போர்ச்சுகலில் உள்ள செராவ்ல்ஸ் அருங்காட்சியகத்தில் (Serralves Museum) மிகப்பெரிய கருந்துளையை வடிவமைத்துள்ளார். இதற்குப் பாராட்டுகள் குவிந்துவந்த நிலையில், இதில் ஒருவர் விழுந்து பலமாக அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நூலரங்கம்: துயர் மறைக்கும் சிரிப்பு
தொழில் முறை புகைப்படக்காரரான பிரபு தர்மராஜின் முதல் எழுத்து என்ற வகையில் நாவலாக வெளிவந்திருக்கிறது ’அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்’ . ஊரில் வெட்டியாக, ஊர்வம்பை விலையில்லாமல் வாங்கிக்கொண்டிருக்கும் ஆபிரஹாம் என்கிற ஆவரான் பணம் சம்பாதிக்க அரபு நாட்டுக்குச் செல்வதும், டிரைவர் என்று சொல்லி அழைத்துச் சென்று ஒட்டகம் மேய்க்கும் பணிக்கு நேர்ந்துவிட, சொல்லவொண்ணாத துயரங்கள் அனுபவித்து தாய்நாட்டுக்குத் தப்பி வருவதுதான் நாவல். இன்னொரு ஆடு ஜீவிதமாக மிகு துயர் பாணியில் நகர்ந்திருக்க வேண்டிய கதையை அதற்குக் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாமல் இருண்மை நகைச்சுவையுடன் பிரபு தர்மராஜ் எழுதியிருக்கும் பாணியில்தான் வித்தியாசம் களை கட்டுகிறது.