கேரளத்தில் வெள்ளம் முழுவதுமாக வடியவில்லை. கொச்சின் மிதக்கிறது. வயநாடு மூழ்கிக்கிடக்கிறது. வரலாறு காணாத மழை இது. உயிர் பிழைத்து வந்திருக்கிறது கேரளம். பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களை உள்ளடக்கிய கேரளத்துக்கு இயற்கை விடுத்திருக்கும் எச்சரிகை இது என்கிறார்கள் சூழலியலாளர்கள். சொல்லப்போனால் இது கேரளத்துக்கான எச்சரிக்கை மட்டுமல்ல... தமிழகத்துக்கும் சேர்த்து இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கை இது!
சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட மாநிலம் என்று கருதப்பட்டாலும் கேரளத்திலும் இயற்கைக்கு எதிராக வளர்ச்சிப் பணிகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக மாதவ் காட்கில் தலைமையிலான மேற்கு மலைத் தொடர் சூழலியல் நிபுணர் குழு கடந்த 2011-ம் ஆண்டு அளித்த சூழலியல் பரிந்துரைகளை மறுத்த விதத்தில் அதன் சூழலியல் அக்கறையிலிருந்து விலகத் தொடங்கியது கேரளம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சிப் பணிகள் குறைவு என்றாலும் மாநிலத்தின் கணிசமான பகுதிகளை மலைப்பிரதேசங்களைக் கொண்ட கேரளத்துக்கு அவையும்கூட ஆபத்துதான் என்று உணராமல் போனதுதான் வேதனை. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பெருகி வரும் ஆறுகளில் கேரள அதிகாரிகள் செய்த திசை திருப்பல்கள் இந்த வெள்ளத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
திசை திருப்பப்பட்ட நீரோடைகள்!
கோவை குற்றாலத்துக்கு தென்மேற்கு பகுதியில் சிறுவாணி மலை உச்சியில் இருக்கிறது கல்கொத்தி பழங்குடியினர் கிராமம். இங்கு உருவாகும் நீரோடை மலையில் இரு பிரிவாக பிரிந்து, ஒன்று கேரளத்தின் பாரதப்புழா ஆற்றுக்கும் மற்றொன்று தமிழகத்தின் சிறுவாணி, நொய்யலுக்கும் வந்துகொண்டிருந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நீர்வரத்து அதிகரிக்கும் போதும், குறையும்போதும் அங்கிருக்கும் பழங்குடியினர் இருபக்கமும் நீர் சமமாகச் செல்லும் வகையில் கற்களைக் வைத்து தடுத்தும் மண்ணைக் கொத்தியும் நீரோடையைப் பராமரித்துவந்தனர். அதனாலேயே அந்தக் கிராமத்துக்கு கல்கொத்தி என்கிற பெயர் வந்தது. ஆனால், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தின் அதிகாரிகள் இந்த நீரோடையை முற்றிலும் கேரளத்துக்கு செல்லும்படி கான்கீரிட் கலவையைப் போட்டு அடைத்து திசைதிருப்பினர். வழக்கம் போல தமிழகமும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. அன்றிலிருந்து சிறுவாணி, நொய்யலுக்கான நீர் ஆதாரங்கள் குறைந்துபோனது. மொத்த நீரும் பாரதப்புழா ஆற்றுக்குச் சென்றது. இப்போதும் அப்படித்தான் தொடர் மழையில் மொத்த நீரும் பாரதப்புழாவில் கலந்து பெரும் வெள்ளம் அந்த ஆற்றில் ஏற்பட்டிருக்கிறது.