யோசனை
‘கழுதைக்குக் கல்யாணம் பண்ணணும்’
அப்பத்தா சொன்னாள்
‘அய்யனாருக்குப் படையல் போடு’
சரக்கடிச்ச சாமியாடியின் உத்தரவு
‘நந்திசாமிய கழுத்தளவு
தண்ணியில நிக்கவைக்கணும்’
சோழி போட்ட ஜோசியர் சொன்னார்
‘அமிர்தவர்ஷினி ராகம் வாசிக்கணும்’
இது தெருக்கோடி நாதஸ்வர வித்வான்
வானம் பார்த்த பூமியில்
தூவானம் போட
ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள்
மரம் நடுவதைத் தவிர!
- எம்.விக்னேஷ்
பாச மல்லி
துண்டுச் செய்தித்தாளில் வைத்து
இறுக்கிக் கட்டப்பட்ட பொட்டலத்தில்
நெருக்கிக் கிடக்கும் மல்லி அரும்புகளை
நூலின் பிடி தளர்த்தி
விரல்குவித்து மிருதுவாய்க் கொஞ்சம் அள்ளி
தரையில் பரப்புகிறாள் மகள்!
எதிரெதிராய் அடுக்கி வைத்த
சோடிகளை லாவகமாய் எடுத்துத்
தொடுக்கத் துவங்குகிறாள்!
இடையிடையே சிக்கும்
காம்பில்லா அரும்புகளை
இனம்கண்டு ஒதுக்கி வைக்கிறாள்.
அவ்வப்போது அவள் முணுமுணுக்கும்
இசையற்ற பாடல்களில்
வாசம் இணைவதை வரவேற்கிறாள்!
உருவில் பெருத்த அரும்பொன்றைப்
பம்பரமாய்ச் சுற்றவிட்டு
ஒரு குழந்தையென ரசிக்கிறாள்!
வழிபாட்டுக் கூட்டத்தில்
வரிசையாய்ச் சீருடை அணிந்து நிற்கும்
பள்ளிச் சிறார்களைப் போல...
சரமாக்கிய பின்
படமாய்த் தொங்கும் தாத்தா பாட்டிக்குச் சூட்டிப்
பாசத்தை நுகர்கிறாள்!
- வ.முருகன்