நிழற்சாலை


இல்லை மான அவமானம்!
காக்கைகளுக்கு இல்லை
மான அவமானம்!
காயும் வற்றலைக்
கொத்த வரும்போது
விரட்டினாலும்
அமாவாசையன்று
அழைத்ததும் வந்துவிடும்!
- வல்லம் தாஜுபால்

கடைசி விளக்கு...
கூவும் சேவல்தான்
எழுப்பிவிடும் அம்மாவை…
பள்ளிக் கூடத்து முதல் மணிக்கு
மண்வெட்டி தோளில் தொங்க...
தூக்கு வாளி தலையில் நிற்க...
புஞ்சைக்கு நடப்பாள்..!
உழைத்துக் களைத்து பசியாற
மத்தியானத்து டவுன் பஸ்
ஸ்ரீவில்லிபுத்தூர் போகும்
சத்தம் கேட்க வேண்டும்!
களை பறிப்போ, பருத்தி எடுப்போ
சுப்புராஜ் மில்லில் சங்கு ஊதிய பின்
கோடி கொடுத்தாலும் நீளாது!
அந்தி சாய்ந்து இருள் படியேறவும்
குழம்பு தாளிக்கும் வாசம் வீசவும்
ஒருநாளும் தவறியதில்லை!
சங்குமுத்து தாத்தா
பெட்டிக் கடை அடைத்து
வாசலில் சூடம் ஏற்றும் நேரம்
அணையும் எங்கள் வீட்டின்
கடைசி விளக்கு!
- க.பொன்ராஜ்

நட்பின் வெப்பம்!
கை கொடுத்துவிட்டு
விடைபெற்ற தருணத்தில்
விரல்களில் மிச்சமிருந்தது
முப்பத்திரெண்டு ஆண்டு கால
நட்பின் வெப்பம்!
- அருள்செல்வன்

அம்மாவின் மகிழ்ச்சி!
கோழிக்கு
மயிலிறகு முளைத்ததுபோல்
மகிழ்ந்துபோகிறாள் அம்மா
ஒவ்வொரு
ஓய்வூதிய நாளிலும்!
- ஹரிணி

x