புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் கிராஃபிக் நாவல்


இலக்கிய விருதுகளில் உயரியதாகக் கருதப்படும் புக்கர் பரிசின் தேர்வுப் பட்டியலில் இதுவரை எந்த கிராஃபிக் நாவலும் வந்ததில்லை. நிக் டிர்னாசோ என்பவர் எழுதிய சபரினா என்ற கிராஃபிக் நாவல்தான் தற்போது முதன்முறையாக புக்கர் பரிசு தேர்வுப் பட்டியலில் நுழைந்துள்ளது. திடீரென்று காணாமல் போய்விடும் ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்கும் துப்பறியும் நாவலாக எழுதப்பட்டுள்ள இந்த கிராஃபிக் நாவல் மிக எளிமையாகவும் மிகச் செறிவாகவும் அமைந்துள்ளதாகப் பலரும் பாராட்டியுள்ளனர். இதற்கு முன் புக்கர் பரிசு வென்ற பலரது நாவல்களோடு இவருடைய கிராஃபிக் நாவலும் போட்டியிடுகிறது. விருதின் தேர்வாளர்கள், இந்த நாவல் புதினத்தின் கட்டமைப்பையே மாற்றுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த கிராஃபிக் நாவல் புக்கர் பரிசை வென்றால் அது வரலாற்றுச் சாதனையாகவே அமையும்.

நூலரங்கம்: சிற்றிதழ்களின் நிஜமான இயக்கம்

தனிச்சுற்று அளவில் வெளிவரும் சிற்றிதழ்களே தமிழ் இலக்கியச் சூழலின் காத்திரத்தைக் கட்டிக் காப்பாற்றி வருகின்றன என்பதில் மிகையில்லை. குறி சிற்றிதழ் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஜூன் 2018 ல் வெளிவந்திருக்கிறது 21 வது இதழ். நடிகர் பொன்வண்ணனின் அழகிய ஓவியத்தை அட்டையில் தாங்கி வெளிவந்திருக்கும் இதழ், கட்டுரைகளில் ஆச்சரியப்படுத்துகிறது.

அடுத்த இதழ் எப்போது வெளிவரும் என்ற கேள்வியுடனே இயங்கிவரும் இதழ்களில் தொடர் என்பது சந்தேகத்துக்குரிய ஒன்று. ஆனாலும், இவ்விதழில் 6 கட்டுரைகளும் அதனதன் தளத்தில் சிறப்பாக இருக்கின்றன. ஒரே விதமான கதைகளின்றி இடம்பெற்றிருக்கும் நான்கு கதைகளும் நான்கு எழுத்துத் தளத்தில் இயங்குகின்றன.

x