நெட்ஃப்ளிக்ஸில் ருஷ்தியின் நாவல்


இந்திய - ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்தியின் ‘தி மிட்நைட் சில்ட்ரன்’ நாவல் 1981-ல், வெளியானது. புக்கர் பரிசு உட்பட இலக்கியத்துக்கு வழங்கப்படும் பல சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றது. அந்த நாவலை தீபா மேத்தா 2013-ல், திரைப்படமாக ஆக்கினார். ருஷ்தியின் ஆகச் சிறந்த படைப்பு என்று இலக்கிய வாசகர்களால் கருதப்படும் ‘தி மிட்நைட் சில்ட்ரன்’ இணையத்தில் தொடராக (சீரியல்) வெளியாகவிருக்கிறது. தொடரைத் தயாரிக்கும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், உலகெங்கும் உள்ள அனைத்து நெட்ஃப்ளிக்ஸ் இணையதளப் பயனர்களும் இதைப் பார்க்க முடியும் என்று சொல்லியுள்ளது.

நூலரங்கம்: உண்மையான எழுத்துப்பதிவு

கவிதை, கட்டுரை என எழுத்தில் தனக்கென ராஜபாட்டை அமைத்துக்கொண்டவர் ராஜசுந்தரராஜன். அவரது ‘நாடோடித்தடம்’ கட்டுரைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறது வாசகசாலை பதிப்பகம்.

புதிய வார்த்தைப் பிரயோகங்கள், எவரும் யோசிக்கவியலாத அழகான உவமை வெளிப்பாடுகள், நிறைய ஆங்கிலச் சொற்களுக்கு உறுத்தாத தமிழ்ப் பெயர்கள் என்று மொழி நடையிலேயே நம்மைப் புதிதான ஓர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது தொகுப்பு. தேசாந்திரி ஒருவரின் ஊர்சுற்றி மனப்பான்மையில் பயணத் துணுக்காய் எதுவும் எழுதப்படாமல், பொருளாதார நிமித்தம், பணி நிமித்தம், வாழ்வியல் நிமித்தம் இடம்பெயரும் ஒரு மனிதனின் அனுபவங்கள் ஒளிவுமறைவு எதுவுமின்றி நம் முன் வைக்கப்படுகின்றன. சபரிமலைக்கு மாலை போட்டு பாலியல் தொழிலாளி வீட்டுக்குச் சென்றதைப் பட்டவர்த்தனமாய் எழுதுகிறார். இதற்கு தொகுப்பாசிரியர் சொல்வதுபோல் ‘கீறிக்கட்டுகையில் சீழ்’ என்ற பதம் பொருத்தமாய்தான் இருக்கிறது.

x