காச்சர் கோச்சர் காட்டும் பொருளாதார பேதம்!


பொருளாதார பேதம் சமூகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து இலக்கியங்கள் விவாதித்திருந்தபோதும், அதைப் பிரதானப்படுத்தி நவீன வாழ்க்கையின் சிக்கல்களைப் பேசுகிறது என்கிற வகையில் விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்' நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. பொருளாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள மனித மனம் எப்படியெல்லாம் குற்றவுணர்வின்றிக் கீழ்மையுடன் செயல்படுகிறது என்பதை எடுத்துரைத்திருக்கும் விதம் இந்நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம்.

தனது சித்தப்பாவின் நிறுவனத்தில் பேருக்கு இருந்துவிட்டு ஒவ்வொரு பொழுதையும் ஊதாரியாகக் கழிக்கும் கதைசொல்லியின் பார்வையில் நாவல் விரிகிறது. கதைசொல்லியின் அப்பா, அம்மா, அக்கா எனப் பொருளாதார ரீதியாக நலிவுற்று இருந்த குடும்பத்தின் நிலையில் தொடங்கி, பிறகு சித்தப்பாவின் வழிநடத்துதலின் பேரில் எதிர்பாராதவிதமாக அக்குடும்பம் பணத்தில் புழங்க நேரும்போது, அவர்களது மனநிலை எப்படியெல்லாம் மாறுகிறது என்பது நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

சித்தப்பாவைப் பகைத்துக்கொண்டால் குடும்பம் நிலைகுலைந்து போவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கிறது. சொகுசான வாழ்க்கைக்குப் பழகிய குடும்பம் மீண்டும் ஏழ்மைக்குள் செல்ல விரும்பவில்லை. அதைத் தக்கவைத்துக்கொள்ள எல்லோரும் சித்தப்பாவைத் தாங்குகிறார்கள். சித்தப்பாவைத் தேடி வீட்டுக்கு வரும் அவரது ரகசியக் காதலியை அசிங்கப்படுத்தித் துரத்துகிறார்கள். அதற்காக அவர்கள் குற்றவுணர்ச்சி அடைவதில்லை. இதற்கு எதிராக இருக்கும் ஒரே ஜீவனான கதைசொல்லியின் மனைவி, நாவலுக்கு வேறு பரிமாணத்தைத் தருகிறாள். ஒரு சாதாரண குடும்பக் கதையாகத் தோன்றும் இந்நாவல் பல நுட்பமான விஷயங்களைக் கையாள்கிறது. அந்த நுட்பங்களை சிதைக்காமல் மொழிபெயர்த்திருக்கிறார் கே.நல்லதம்பி.

- த.ராஜன்

x