நியூயார்க்கைக் கலக்கும் நான்கு வயது ஓவியன்!


நியூயார்க் நகரத்தின் மிக இளவயது ஓவியர் என்ற பெருமையை நான்கு வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் அத்வைத் கோலார்கர் பெற்றிருக்கிறான். எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே தூரிகையை எடுத்து வரைய ஆரம்பித்த அத்வைத்தைப் பார்த்த பெற்றோருக்கு ஆச்சரியம். அதன்பிறகு தொடர்ந்து அவனுக்குத் தூரிகைகளோடும் வண்ணங்களோடும் பழகும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 2016-ல், இந்தியாவிலிருந்து அத்வைத்தின் குடும்பம் கனடாவுக்குக் குடியேறியது. யாரிடமும் ஓவியத்தை முறையாகக் கற்கவில்லை என்றாலும், அத்வைத் உருவாக்கிய ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது. அவற்றில் தனித்தன்மை இருப்பதாகப் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். இதுவரை மூன்று கண்காட்சிகளை நடத்தியுள்ளனர் இவனது பெற்றோர். இப்போது நியூயார்க் நகரத்தில் அத்வைத்தின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்வையாளர்கள் க்யூவில் நின்று பல ஆயிரம் டாலர்களுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

- ஜெ.சரவணன்

நூலரங்கம்: பொக்கிஷப் புத்தகம்

இலக்கியவாதியின் வாழ்வு என்பது அவனது படைப்புகள்தாம். அந்த வகையில் காலத்தால் மறக்கமுடியாத எழுத்தைத் தந்த சி.மணியின் கவிதைகள், கதைகள், கட்டுரைகளைச் சேர்த்து மொத்தத் தொகுப்பாக ‘மணல் வீடு’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தொகுத்திருப்பவர் கால சுப்ரமணியம். எவ்வித உறுத்தலுமின்றி வாசிக்க எளிமையாகத் தனித்தனியாக அனைத்தையும் பிரித்து அழகுற வடிவமைத்துத் தந்திருக்கும் பதிப்பகத்தாருக்குப் பாராட்டுகள். வாசிப்பு அனுபவத்தைத் தாண்டி வேறு பல அனுபங்களையும் தருகிறது இத்தொகுப்பு. நூலாக்கம் பெறாத கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது இன்னொரு சிறப்பு.

x