தியான்மென் சதுக்கத்தின் தனி ஒருவன்


தியான்மென் சதுக்க படுகொலையை அடுத்து ஒற்றை ஆளாக சீன அரசின் வன்முறையை எதிர்த்து நின்ற ‘டேங்க் மேன்’ உலக அளவில் நினைவுகூரப்பட்டார்.

1989-ல், சீன அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து மாணவர்களால் வழிநடத்தப்பட்ட போராட்டம் மக்களிடையே பரவியது. அந்த ஆண்டே ஜூன் 4 அன்று தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் கூடிப் போராடியவர்களை ஆயுதங்களால் எதிர்கொண்டது அரசு. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் நடந்த அடுத்த நாள், அதே இடத்தில், சாலையில் அணிவகுத்து வந்துகொண்டிருந்த ராணுவத்தின் பீரங்கி வண்டிகளுக்கு முன் நின்று தனது எதிர்ப்பைக் காட்டினார் ஒரு தனிநபர். அப்போது அவரது கைகளில் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய இரண்டு பைகள் மட்டுமே இருந்தன. ஆயுதம் எதுவுமில்லாமல் ஒற்றை ஆளாக வெடிகுண்டுகளைத் தாங்கிவந்த பீரங்கி வண்டிகளை எதிர்த்து நின்ற அவரது செயல் உலக அளவில் கவனம் பெற்றது. அடையாளம் தெரியாத அந்த நபரை ‘டேங்க் மேன்’ என்று உலகம் அடையாளப்படுத்திக்கொண்டது. இன்றளவும் அரச வன்முறைக்கெதிரான தனிமனித எதிர்ப்பின் சின்னமாகப் பார்க்கப்படுகிறார் ‘டேங்க் மேன்’. அவர் யார், இப்போது எங்கு இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று யாருக்கும் இதுவரையிலும் தெரியாது.

தியான்மென் சதுக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இன்னமும் சிறையில் வாடுகிறார்கள். அந்தப் போராட்டமே உலக நாடுகளின் சதி என்று சீன அரசு சொல்லிவருகிறது. தியான்மென் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளை சீன அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு சீன ஓவியரும் கார்டூனிஸ்ட்டுமான படியுகாவ் என்பவரின் முயற்சியால், டேங்க் மேன் உலக அளவில் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

x