துன்பம் வரும் நேரத்துல...


சமீபத்துல ஒரு விபத்து. அழகர்கோயில் சாலையில இருந்து பூண்டி பிரிவில் திரும்புறப்ப, (இண்டிகேட்டர் போட்டுத்தான்) பின்னாடி முரட்டு பைக்கில் வந்தவிய்ங்க டமால்னு மோதுனாங்க. என் கையெல்லாம் சிராய்ப்பு, கால் முட்டியிலயும் ரத்தம். பைக் சைலன்சர் வேற கழண்டுருச்சி. ஆத்திரத்தோடு எந்திரிச்சிப் பாத்தா, மோதுன வண்டியில் இருந்த ஒருத்தன் செத்தது மாதிரி கெடந்தான். சட்டுன்னு கோவம் பயமா மாறிடுச்சி. என்னால் ஒழுங்கா நடக்க முடியும்ன்னாலும், ‘நானும் பலமா அடிபட்டிருக்கிறேன்டா... மேற்கொண்டு அடிச்சிறாதீங்க...’ என்று காட்டிக்கிறதுக்காக சீன் போட்டேன். ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி, கையையும் காலையும் ஒரு மாதிரியா வெச்சுக்கிட்டு ரோட்டோரம் போய் உட்காந்தேன்.

அப்புறம்தான் தெரிஞ்சுது, தலைவன் காயத்துல இல்ல, நிறை போதையில் மயங்கியிருக்கான்னு. ஓட்டுனவன் அதுக்கு மேல போதை. ஆனாலும், அவிய்ங்க உள்ளூர்க்காரய்ங்க போல, போன் போட்ட அடுத்த நிமிஷமே ஒரு கும்பல் கூடிருச்சி. எனக்கும் சண்டை போட பிடிக்கும்தான். ஆனா, என் அணியில் 6 பேர் எதிரணியில் ஒரே ஒருத்தன், அதுவும் தொத்தலா இருந்தாத்தான் சண்டைக்குப் போவேன். அப்பேர்பட்ட வீரனான நான் இப்பிடி ‘சிங்கிளா’ சிக்கியதால், ‘சிவாஜி’யாக (பழைய சிவாஜிங்க) மாறி ஓவர் ஆக்டிங் கொடுத்தேன். ‘காலா’ ரஜினி பாஷையில சொன்னா, ‘உடம்புதான் நம்ம ஆயுதம்’னு காட்டிட்டேன். ஆனா, என்னைய அடிக்கப் பயந்தவனுங்க வேற பிளான் போட்டாங்க. “இவனை நாம போற ஆஸ்பத்திரிக்கே தூக்கிட்டுப் போய், ஆஸ்பத்திரி செலவு, வண்டிச் செலவு எல்லாத்தையும் வாங்கிட்டுத்தான்டா விடணும்”னு!

அப்ப பார்த்து ஒரு நடமாடும் தெய்வம்... டிவிஎஸ் 50-ல வந்த அந்தத் தெய்வம், “தம்பி, சட்டுன்னு இடத்தைக் காலி பண்ணுங்க. போலீஸ்காரங்க வந்தா, ‘ட்ரங்கன் டிரைவ்’ கேஸ் போட்டுருவாங்க. 108 ஆம்புலன்ஸ்ல ஏத்தி விட்டா, அவன் நேரா மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்குத்தான் போவான். அவன் மிச்சத்தையும் உருவிடுவான். பேசாம, நீங்களே கவுருமென்டு ஆஸ்பத்திரியைப் பார்த்துப் போயிடுங்க” என்றது. அந்தத் தெய்வம் நின்ற திசைநோக்கி வணங்குனேன். போதைக்கிராக்கிகள் இரண்டும் எழுந்து, வண்டியைக் கிளப்பியது. நானும் நைசா வண்டியை எடுத்தேன். பைக் ஸ்டார்ட் ஆகாமல் காலை வாறியது. அதற்குள்ளாக அவங்க, “டேய்... (பீப்) எங்கடா...(பீப்) எஸ்கேப் ஆகப்பார்க்கிற (பீப்)” என்று சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைகள பொழிஞ்சாங்க. ஒவ்வொரு வரிக்கும் நடுவில் இணைப்புச் சொல் பயன்படுத்துறது மாதிரி, இவிய்ங்க ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவுல கெட்டவார்த்தையை யூஸ் பண்றாங்க. இத்தனைக்கும் அவர்களுக்கு என்னைவிட பத்து வயசு கம்மி. கெட்ட பசங்க சார்.

பைக்கில் முன்னாடி ஒரு குடிகாரன், பின்னாடி ஒரு குடிகாரன். நடுவில் என்னை (கேட்டுக்குள்) உட்காரவெச்சி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனாங்க. அவங்க காசைப் பறிக்குறதுக்குள்ள பதுக்கிடணும்னு, நைசா பேன்ட் பாக்கெட்டுக்குள்ள கையை கைவிட்டேன். “என்னடா, உன் ஃபிரெண்டுக்குப் போன் போடப் போறீயா?”ன்னு பின்னால் இருந்த பொடியன் ‘மரியாதை’யாக் கேட்டான். “இல்லீங்க தம்பி. பர்ஸ் இருக்குதுதான்னு செக் பண்றேன்” என்றேன். “இல்லைன்னா சொல்லுங்க பாஸ், திரும்பப் போய் எடுத்திட்டு வந்திடலாம்” என்று அக்கறையாச் சொன்னான் முன்னாடி இருந்த தடியன். நைசாக பர்ஸில் இருந்த இரண்டாயிரத்தை எடுத்து ஜட்டிக்குள் பதுக்கிட்டேன்.

x