திடீர்னு காலைல, ‘ஒரு வருஷம்... ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொரு பாப்பா...’ன்னு எம்ஜிஆர் பாட்டு ஓடுச்சுன்னா எங்க ஊர்ல யாருக்கோ கல்யாணம்னு அர்த்தம். “எப்படா கல்யாணம்?”னு கேட்டா, “அதெல்லாம் விடியக்கருக்கல்லேயே முடிஞ்சிட்டு”ம்பாங்க.
நிச்சயதார்த்தம், பத்திரிகை அடிக்கிற வழக்கமெல்லாம் அப்ப அவ்வளவா கெடையாது. முந்தைய நாள் ராத்திரியில் நிறைபோதையில் இருந்த கருவாட்டு ஏவாரி கட்டத்துரைகிட்ட, “ஏலே வயசுக்கு வந்த புள்ளய வீட்ல வெச்சிக்கிட்டு, இப்படிக் குடிச்சிக்கிட்டு இருக்கியேல...”ன்னு இன்னொரு குடிகாரன் கேட்டுருக்கான். உடனே சுருத்து(வேகம்) வந்து, அங்கேயே ஒரு குடிகாரனோட சம்பந்தம் பேசிட்டார் கட்டத்துரை. ராவோடு ராவா கல்யாண ஏற்பாடு பண்ணி, அதிகாலையில தாலியைக் கெட்டிட்டாங்க. இப்படித்தான் எங்க ஊர்க் கல்யாணங்கள் பல சொர்க்கத்தில் அல்ல... சாராயக்கடையில்தான் நிச்சயிக்கப்படும். பொண்ணுக்கு சீலை கட்டத் தெரியாது. மாப்ளைக்கு சாரம் (கைலி) கட்டவே வராது. ஆனா, தாலி கட்ட வெச்சிருவாங்க. அவசரத்தில் தாலிக்கு மஞ்சள் கயிறுகூட கிடைக்காமல் அருணாக் கயிறு(அரைஞாண்) வெச்செல்லாம் கல்யாணம் நடந்திருக்கு.
கல்யாண வீட்ல மேளக் கொட்டுச் சத்தம் கேக்குதோ இல்லியோ, திட்டுச்சத்தம் காதைக் கிழிக்கும். “என் மவனுக்குப் பொண்ணைக் கட்டிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி ஏமாத்திட் டீயளே...”ன்னு அத்தைக்காரி சாமியாடுவா. “சரி விடுக்கா. என்கிட்டையும் ரெண்டு பொண்ணு இருக்கு...”ன்னு சாலமன் பாப்பையா மாதிரி இடை யில இன்னொரு ஆளு சந்துல சிந்துபாடுவாரு!
கல்யாணம் முடிஞ்சதும் ஊர்ச்சாப்பாடு போடுவாங்க. அதுக்கு ஒவ்வொரு வீட்ல இருந்தும் அரிசி குடுத்தாகணும். ‘எல்லாரும் நல்ல அரிசி போடுறபோது, நம்ம அரிசி மட்டும் தனியாத் தெரியவாப் போகுது?’ன்னு ஒவ்வொருத்தரும் ரேஷன் அரிசியைக் கொண்டுவருவாங்க. சேர்றது எல்லாம் ரேஷன் அரிசிங்கும்போது, சாப்பாடைப் பத்திக்கேட்கவா வேணும்? (அந்தக் காலத்துச்) சத்துணவுச் சோறு மாதிரி மணக்கும்(!). அந்தச் சோத்தையும், இலையில் போடப்போட தூக்கு வாளியில் பதுக்கும் ஒரு கூட்டம். ஆக, முதல் பந்தியிலேயே சாம்பார், ரசம், கூட்டு எல்லாம் தீர்ந்துடும். ரெண்டாவது பந்திக்கு சாம்பார், ரசம், கூட்டு எல்லாத்தையும் ஒண்ணு சேத்து, மேற்கொண்டு பத்துப் பானை தண்ணிகள ஊத்தி கொதிக்க வெப்பாரு தவசிப்பிள்ளை. “கலக்கி ஊத்துனா சாம்பாரு... அரிச்சி ஊத்துனா கூட்டு... தெளிஞ்சாப்ல ஊத்துனா ரசம். உனக்கு என்ன வேணும்?”ன்னு கேட்டுக் கேட்டு ஊத்துவாங்க. இந்த விருந்துக்கு, ‘கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரம்மாதம்’ன்னு ‘சிட்டிவேஷன் சாங்’ போட்டு வெறுப்பேத்துவான் ரேடியோ செட்டுக்காரப் பையன்!