நூலரங்கம்: ஓர் உடல் இரு உருவங்கள்


பர்லாகர் க்விஸ்ட் எழுதிய ‘குள்ளன்' நாவலில் குள்ளன் என்றொரு பாத்திரம் உண்மையிலேயே உண்டா, அல்லது அது ஆழ்மனதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதா, இல்லையேல் வேறு ஏதேனுமா, இல்லாத பாத்திரம்தான் கதை சொல்லிக்கொண்டிருக்கிறதா என்பன போன்ற மாயத்தோற்றம் நாவல் முழுவதிலும் இருக்கும். ஒட்டுமொத்தமாக வாசித்து முடித்த பின்பே இதுபோன்ற கேள்விகளை எழுப்பி மனதால் அசைபோட்டுக்கொள்ளலாம். ஓரான் பாமுக்கின் ‘வெண்ணிறக் கோட்டை'யின் ஓரிரு அத்தியாயங்களைக் கடக்கும்போது இல்லாத ஒன்றை இருப்பதுபோல் சித்தரித்திருக்கும் ‘குள்ளன்' நினைவுக்கு வந்தது.

17-ம் நூற்றாண்டு இஸ்தான்புல் நகரைப் பின்புலமாகக் கொண்ட கதைக்களம். ஒரு மனிதனின் இருமை நிலையைப் பற்றிய தேடலும் விவரணைகளுமே நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. தனக்குள் இருக்கும் மற்றொருவரை அல்லது மற்றவருக்குள் இருக்கும் தன்னை ஒருவர் எதிர்கொள்வதே மையச் சரடு. அவனும் இவனும் உருவத்தால் ஒத்திருப்பதும், உருவ ஒற்றுமையைக் கண்டு ஒருவன் திடுக்கிடுவதும் மற்றொருவன் சாந்தம் கொள்வதும், பின்பு இருவரும் கண்ணாடியில் தன்னுருவத்தைக் கண்டு அதிர்ச்சியாவதும், ஒருவர் இன்னொருவர் மீது செல்வாக்கு செலுத்துவதும் என இந்த மாயப்போக்கு, நாவலின் இறுதிவரை தொடர்கிறது.

இந்நாவலுக்கு மிகச் சிறப்பாக அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிங் ஆஃப் ஸ்பேட்:

உருவங்கள் சிதைந்தும், சரிபாதியாகப் பிரிக்கப்பட்டும், முகத்துக்கு அருகில் மற்றொரு உருவம் நிழலாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. நாவலின் களம், காலம், பாத்திரத்தின் இயல்பு என ஒட்டுமொத்த சாராம்சத்தையும் ஒற்றைப்படத்தில் அற்புதமாகப் பிரபலித்திருக்கிறது. சிரத்தையான மொழிபெயர்ப்பால் ஜி.குப்புசாமி இந்த நாவலின் ஆன்மாவை நமக்குள் அழகாகச் செலுத்திவிடுகிறார்.

x