புதிய உத்திகளைப் பயன்படுத்தி ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்', ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' போன்ற நாவல்களை எழுதிய தமிழவனின் சமீபத்திய படைப்பு ‘ஆடிப்பாவை போல'. முற்றிலும் மாறுபட்ட கதைசொல்லல் முறையில் ஒரு பரிசோதனையை நிகழ்த்தியிருக்கும் ‘ஆடிப்பாவை போல', தமிழ் நாவல்களில் ஒரு புதிய சாத்தியத்தை எட்டியிருக்கிறது.
திராவிட இயக்கச் செயல்பாடுகள், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் தமிழ்ப் புனைவுகளில் அதிகம் பதிவுசெய்யப்படவில்லை. தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’க்குப் பிறகு தமிழவனின் ‘ஆடிப்பாவை போல’ நாவலின் மையமாக இந்த இரண்டு விஷயங்களும் கையாளப்பட்டிருக்கின்றன.
வின்சென்ட் ராஜாவும் காந்திமதியும் ஒரே ஊருக்கு ரயில் பயணப்படுவதிலிருந்து ‘அகம்’ பகுதி தொடங்குகிறது. தொடர்ச்சியான சந்திப்புகள், உரையாடல்களின் வழி இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், இருவரும் மற்றவரிடம் வெளிப்படுத்துவதில்லை. இந்நிலையில் வின்சென்ட்டின் நண்பனான கிருபாநிதிக்கு காந்திமதியின் தோழியான ஹெலனின் மேல் காதல். ‘புறம்’ பகுதி முழுவதும் இரண்டு தலைவர்கள் இடையேயான அரசியல் போட்டியைப் பேசுகிறது. அகம், புறம் பகுதியை இணைப்பது இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான்.
நாவலில் மொத்தமுள்ள 19 இயல்களில் 1,3,5 என்று வரும் ஒற்றைப்படை இயல்கள் அகம் என்றும், 2,4,6 என இரட்டைப்படை இயல்கள் புறம் என்றும் பகுத்து எழுத்தப்பட்டுள்ளது. அகம், புறம் மற்றும் 1,2,3 என்கிற மரபான வரிசையிலும் இந்த நாவலை மூன்று விதங்களில் வாசிக்க முடியும். இப்படியான வாசிப்பு முறை தமிழுக்கு புதிது. இந்த உத்தி சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.