தனியே.. தன்னந்தனியே.. திருச்சி – லடாக்… ஓர் இந்தியப் பயணம்!


வானத்தில் சிறகை விரித்துப் பறக்கும் பறவையின் உற்சாகத்துடன் தனது வெள்ளைநிற வெஸ்பா வி.எக்ஸ்.ஐ.150 சிசி இருசக்கர வாகனத்தில் சாலையில் மிதந்து கொண்டிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராணி. உற்சாகத்துக்குக் காரணம், திருச்சியிலிருந்து இமாச்சலத்தின் லடாக் வரையிலுமான அவரது நெடும்பயணம்!

அதுவும் தன்னந்தனியான பயணம். கடந்த மாதம் 25-ம் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்ட செல்வராணி பத்து நாட்கள் பயணத்தில் பெங்களூரு, கர்நூல், ஹைதராபாத், சிந்துவாலா, நாக்பூர், லலித்பூர், ஆக்ரா, பக்பத் ஆகிய நகரங்களைக் கடந்து, கடந்த 4-ம் தேதி சண்டிகரைச் சென்றடைந்திருந்தார். அவரிடம் அலைபேசியில் உரையாடினேன்.

இப்படி நெடுந்தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது ஆபத்தில்லையா?

எதில்தான் இல்லை ஆபத்து? வீட்டுல இல்லையா, தெருவுல இல்லையா, எங்கேயும்தான் இருக்கு. நாமதான் எதிர்கொண்டு கடந்து போகணும். பிரச்சினை வரும்னு யோசிச்சுக்கிட்டேருந்தா, எந்த வேலையும் பார்க்க முடியாது. முதலில் யோசிக்கணும், அப்புறம் திட்டமிடணும், அடுத்ததா காரியத்தில் இறங்கணும். அப்படித்தான் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கேன். பத்துநாட்கள் ஓடிடுச்சு. இதுவரையிலும் சின்னதாக்கூட எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லா ஊரிலும் நல்லவங்களும் இருக்காங்கதானே.

x