தமிழக ஊடக வரலாற்றில் அழிக்க முடியாத தடம் பதித்துச் சென்றவர் ஞாநி. அவர் 1982 முதல் 2006 வரை ‘தீம்தரிகிட’ என்ற சிற்றிதழை நடத்திவந்தார். ஞாநியின் மனைவி ஏ.எஸ்.பத்மாவதி தனது நண்பர்களின் துணையுடன் ‘தீம்தரிகிட’ இதழ்கள் அனைத்தையும் ஏழு தொகுப்புகளாகத் தொகுத்துள்ளார். சர்வதேசப் பத்திரிகைச் சுதந்திர தினமான மே 3 அன்று இந்தத் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. இந்த முயற்சி பற்றி பத்மாவதியிடம் பேசியதிலிருந்து...
‘தீம்தரிகிட’ இதழ்களைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருப்பது எதற்காக?
ஞாநி ‘தீம்தரிகிட’ இதழைப் பெரும் நிதி நெருக்கடியிலும் நடத்தி வந்தார். பல முறை நிறுத்தப்பட்டு பணம் கிடைக்கும்போதெல்லாம் இதழைக் கொண்டு வந்தார். 2016-ல் கூட மீண்டும் இதழைக் கொண்டுவர முயன்றார். 500 சந்தாதாரர்கள் கிடைத்தால் போதும் என்று நினைத்தார். ஆனால், 50 சந்தாக்கள்கூட கிடைக்கவில்லை. இருப்பினும் ‘தீம்தரிகிட’ இதழ் வெளிவந்த காலகட்டங்களில் நடந்த அரசியல், சமூக நிகழ்வுகள் அதில் உண்மை மாறாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாத தீர்க்கமான விமர்சனக் குரலாக இருந்தது அந்த இதழ். எனவே, அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம்.
இதழ் தொகுப்புகளைப் பத்திரிகைச் சுதந்திர தினத்தில் வெளியிட்டது ஏன்?