ஒரு பந்தின் காதல்! – கணேசகுமாரன்


சரவணன் சந்திரனின் சமீபத்திய நாவல் ‘பார்பி’. கந்தக பூமியின் வெக்கையிலிருந்து புறப்பட்டு வரும் ஒரு ஹாக்கி வீரனின் வாழ்க்கை. அடிப்படையில் சரவணனும் ஒரு ஹாக்கி வீரர் என்பதால், அதன் உள் அரசியலை எளிதாகச் சொல்ல முடிந்திருக்கிறது. ஆனால், விளையாட்டை மட்டும் சொல்லவில்லை நாவல்; கற்களை அடுக்கி வைத்து அக்கற்களின் இடுக்கில் புகுந்து வளைந்து நெளிந்து வரும் விளையாட்டு வீரனின் வரலாற்றையும் நாயகனின் குரலில்சொல்லத் தொடங்கிவிடுகிறது; அதே பாணியிலேயே. வெவ்வேறு களங்களைக் கதையாக்கும் சரவணன் சந்திரன் இம்முறை தன்னையே நாயகனாய்ப் புனைந்திருக்கிறார் .

கிட்டத்தட்ட அரிச்சுவடியிலிருந்து ஒருவனின் விளையாட்டு வேகத்தைச் சொல்கிறது நாவல். கிராமத்தில் பள்ளிக்கூட விளையாட்டுப் பிரிவில் நிகழும் மோதலும் அவமானமும், கல்லூரி கடந்து தொடரும் சாதி துவேஷமும் அர்ப்பணிப்புக்குக் கிடைக்கும் அலட்சியமும் சரவணன் சந்திரனின் வழக்கமான வேக எழுத்து நடையில் விரைகிறது. ஆனால், பார்பி அதுவல்ல. நாயகனின் குற்ற உணர்வும் அதன்மீது பிறக்கும் காதலுமே ‘பார்பி’.

வறுமைப்பட்ட இடத்திலிருந்து முன்னேறிச் செல்லும் ஒரு விளையாட்டு வீரனின் கதை, அவனதுவாழ்வில் எதிர்கொள்ளும் மனிதர்களையும், ஹாக்கியின் நெளிவுசுளிவுகளையும், அவனுக்குள் ளிருக்கும் காதலையும் பேசுகிறது. பத்திக்குப் பத்தி பல்வேறு மனிதர்களின் பல்வேறு குணங்களை எந்தப் பூச்சுமின்றி சொல்லிச் செல்வதில் பந்தினை கோலுக்கு அனுப்பும் ஹாக்கி ஸ்டிக்கின் வேகம்.

ஒரு கட்டத்துக்கு மேல் நாயகனின் வாழ்க்கை விவரிப்பு, நிஜமும் இன்றி புனைவுத்தன்மையின் அழகியலையும் மீறிவெறும் பத்திகளாய் மட்டுமே கடக்க ஆரம்பித்துவிடுவது குறை. ஜாக்குலின் நித்திய குமாரி என்ற நிஜ பார்பியுடனான காதலும், அவளுக்கு நிகழும் துயரமுமே நாவலின் கட்டுரைத் தன்மையை நீக்கி ஓரளவு புனைவில் இயங்க வைக்கிறது.

x