தமிழில், திரையிசைக் கலைஞர்களை எப்படி அணுகுவது என்பது நீண்டகாலமாகக் குழப்பமான விஷயமாகவே இருந்துவந்தது. பத்திரிகைகளில் வெளியான திரைப்பட விமர்சனங்களில் ஓரிரு வரிகளில் மட்டும்தான் இசையமைப்பாளர்கள் பற்றிய கருத்துகள் இடம்பெறும். பாடல்களைப் பிரதானமாகக் கொண்ட படங்கள் தொடர்பான விமர்சனங்களில், இசையமைப்பாளர்கள் பெயர் இடம்பெறாத நிகழ்வுகளும் உண்டு. பாடகர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இணையத்தின் வரவுக்குப் பின்னர், திரையிசைப் பாடல்களைப் பற்றிய ரசனைப் பதிவுகள் வெளிவரத் தொடங்கின. பலர் தாங்கள் ரசித்த பாடல்களைத் தங்கள் சொந்த அனுபவங்கள், நினைவுக் குறிப்புகளின் வழியே பதிவுசெய்யத் தொடங்கினர். இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பற்றிய விவாதங்கள் உருவாகின. அதன் தொடர்ச்சியாக, திரையிசைப் பாடல்கள் தொடர்பான கட்டுரைகள் சிறு பத்திரிகைகளில் இடம்பெற்றன. இன்றைக்குப் பிரதான பத்திரிகைகளிலும் திரையிசைப் பாடல்கள் தொடர்பான கட்டுரைகளைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில், மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் இசைப் பயணம் தொடர்பாக, ரசனை அடிப்படையில், தான் ஃபேஸ்புக்கில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார் நாடோடி இலக்கியன்.
ஸ்வர்ணலதா 80-களின் இறுதியில் அறிமுகமாகி ‘மாலையில் யாரோ’, ‘குயில் பாட்டு’ போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். 90-களில், திரையிசையின் போக்கு மாறியது. புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகியிருந்த நிலையில் புதிய குரல்களின் தேவையும் இருந்தது. ஏற்கெனவே, அறிமுகமாகியிருந்த பாடகர்கள், புதிய பாணிக்கு மாறுவதில் சவால் இருந்தது என்று சொல்லலாம். அதை வெற்றிகரமாக எதிர்கொண்டவர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர்.
இளையராஜாவின் இசையில் அற்புதமான மெலடிகளைப் பாடிய அவர், ஏ.ஆர். ரஹ்மான், சிற்பி, வித்யாசாகர் போன்றோர் வேகமான தாளக்கட்டில் உருவாக்கிய பாடல்களைத் தனது அநாயாசமான குரல் வீச்சால் மிளிரச்செய்தவர். அவரது குரலை இசையமைப்பாளர்கள் பயன்படுத்திய விதம், அவருடன் பாடிய பாடகர்கள் எதிர்கொண்ட ‘சவால்கள்’ என்று பல்வேறு விஷயங்களை எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். உச்சரிப்பிலும், பாவங்களை வெளிப்படுத்துவதிலும் ஸ்வர்ணலதா காட்டிய திறனை நுட்பமாக உள்வாங்கிப் பதிவுசெய்திருக்கிறார். பாடல்களின் பின்னணி தொடர்பாக ஆசிரியர் முன்வைக்கும் முடிவுகளில் சில சுவாரஸ்யமானவை. சில வேடிக்கையானவை. இதுபோன்ற புத்தகங்கள் திரையிசை ரசனையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!