விரிஞ்ச மார்பு, ஒடுங்குன இடுப்பு, பருத்த தோள்கள், புடைத்த கைகள்னு இருந்தா நல்லாயிருக்கும்தான். ஆனா, முகத்துல தாடி வளர்றது மாதிரி அதுவும் தானா வந்தா நல்லாயிருக்கும்னு தோணுது.
எங்க காலேஜ் ஃபிசிகல் எஜுகேஷன் டிப்பார்ட்மென்ட்ல ஒரு பையன் இருந்தான். சாதாரணமா நடக்கும்போது கூட, ரெண்டு கையிலயும் சாம்பார் வாளி வெச்சிருக்கிறது மாதிரியே கையை விரிச்சிக்கிட்டு நடப்பான். “பாடி பில்டர் அர்னால்டால காபி, டீ தம்ளரைக்கூட வாய்ப்பக்கம் கொண்டு வர முடியாது தெரியுமா? தலையைக் குனிஞ்சிதான் கையில இருக்கிற காபியை குடிப்பாரு. அந்த மாதிரி பெரிய ‘ஆர்ம்ஸ்’ வரணும்னு ஒர்க்கவுட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” அப்படிம்பான். அவனைப் பார்த்து நானும் ஓவர் நைட்ல அர்னால்டு ஆக முயற்சி பண்ண, ஜிம்முக்குள்ளேயே வாந்தியெடுத்து மயங்குனதுதான் மிச்சம்!
நீண்ட இடைவெளிக்குப் பெறவு, மதுரையில ஒரு ஜிம்முக்குப் போனேன். அங்கிருந்த பயிற்சியாளர், “நெஞ்சை விரிக்கணுமா? இடுப்பைக் குறைக்கணுமா? ஆர்ம்ஸை ஏத்தணுமா? இல்ல டோட்டலா உடம்பை இறுக்கணுமா? வெயிட் லாசா, வெயிட் கெயினா?”ன்னு கேட்டுக்கிட்டே போனார். கடைசி ரெண்டு வார்த்தையை மட்டும் கேட்கலைன்னா, அவரை டெய்லர்னு நினைச்சிருப்பேன். “சும்மா, ஃபீஸ் விசாரிக்க வந்தேம்ணே. 1-ம் தேதியில இருந்து வாரேன்”னு சொல்லிட்டுத் திரும்பிட்டேன். நான்னு கிடையாது, தமிழ்நாட்ல முக்கால்வாசிப் பேரு கிரவுண்டுக்குப் போறது, ஜிம்முக்குப் போறதுன்னு முடிவெடுத்துட்டா, ஒடனே போக மாட்டாங்க.
ஏதோ படம் ரிலீஸ் பண்ற மாதிரி, ‘1-ம் தேதி முதல்’ன்னு டேட் ஃபிக்ஸ் பண்ணுவாங்க. அதாவது, ஜூன் 1-ம் தேதி முதல் கிரவுண்டுக்குப் போகணும்னு மே 3-ம் தேதி முடிவெடுப்பாங்க. அதுமட்டுமா, அடுத்த மாசத்துல இருந்து பரோட்டா, ஆயில் ஐட்டம் எல்லாம் சாப்பிட முடியாதுன்னு இப்பவே வெளுத்துக் கட்டி, கிடா கணக்கா பருத்துடுவாங்க.