இந்த அதிகாரிங்க தொல்லை தாங்க முடியலப்பா..!


நான் தொழில் பழகுன நிறுவனத்துல ஒரு ஆபீஸர் இருந்தாரு. ‘இந்தியன்’ படத்து செந்தில், கொஞ்சம் கலரா இருந்தா எப்படியிருக்கும்? அப்படியிருப்பார். அவர் ஆபீஸுக்குள்ளாற நுழைஞ்சதும் அத்தனை பேரும் ஸ்கூல் பசங்க மாதிரி எழுந்திரிச்சி நின்னு ‘குட்மானிங்’ சொல்லணும். யார்லாம் குட்மானிங் சொல்லாம சும்மா வாயசைக்கிறாங்க, யார்லாம் சீட்ல இருந்து முழுசா எழுந்திரிக்கலன்னு எல்லாத்தையும் ஓரக்கண்ணாலேயே கவனிச்சி, அவங்கள வெச்சி செய்றதுதான் அன்னைக்கு சாரோட முக்கியமான வேலை.

ஒரு வாரத்து வேலையை ஒரே நாள்ல செய்ய வெப்பாரு. இடையில் ஒண்ணுக்குப் போனாகூட, “என்னய்யா, உனக்கு சுகரா?”ன்னு கேட்பாரு. டூட்டி முடிஞ்சதும் அவர்கிட்ட சொல்லிட்டுத்தான் போகணும். அப்படிச் சொல்லிட்டுக் கிளம்பலாம்னு பக்கத்துல போய் நின்னா, மனுஷன் வேலையில் முங்கிடுவாரு. கால் மணி நேரம் கழிச்சி நம்மைப் பார்த்து திரும்பி, “ஒரு நிமிஷம் நில்லு”ம்பாரு. வார்த்தை “நில்லு” தான் ஆனா, சொல்றவிதம் ‘நில்றா நாயே’ன்னு இருக்கும்.

அந்த ‘ஒரு நிமிஷம்’ முடிய, மேற்கொண்டு 10 நிமிஷம் ஆகும். கடைசியில வேற வழியில்லாம நம்மை நிமிர்ந்து பார்த்து, “என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட?” என்பார். “சார் காலைல 9 மணிக்கு ட்யூட்டிக்கு வந்தேன். இப்ப ராத்திரி 9 மணி” என்றால், “மணி பாத்து வேலை பார்க்கிறதுக்கு இது என்ன கவர்மென்ட் ஆபீஸா? வாங்கிற சம்பளத்துக்கு (தினமும் 120 ரூபாய்) ஒழுங்கா வேலை பார்க்கணும்யா” என்று திட்டிவிட்டு, “போய்த்தொலை” என்பார்.

“அப்பாடா, சனியன் விட்டுச்சு”ன்னு கௌம்புனா, அடுத்த அஞ்சு நிமிஷத்துல போன்ல கூப்பிடுவார். வண்டியை ஓரமா நிறுத்திட்டுப் பேசுனா, “போன் போட்டா உடனே எடுத்துப்பேச முடியாதா?, இதுல ரிங்டோன் வேற”ன்னு எகிறுவார். இத்தனைக்கும் அது ஆபீஸ் செல்போன் இல்ல, சொந்தக்காசுல வாங்கியது. “ட்ராஃபிக் சார்”னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, “உன்கிட்ட சொல்றதுக்கு நானே அந்த வேலையைச் செஞ்சிட்டேன்” என்பார். “அப்புறம் ஏன்யா எனக்கு போன் போட்ட?”ன்னு சொல்லத்தோணும். ஆனா, சொல்ல முடியாது பாருங்க, அப்பத்தான் பிரஷர் ஏறும்.

x