நூலரங்கம்: நிலத் தாயின் துயரக் கதை


‘நஞ்சுண்ட காடு’, ‘விடமேறிய கனவு’, ‘அப்பால் ஒரு நிலம்’ ஆகிய குணா கவியழகனின் முதல் மூன்று படைப்புகளும் ஈழப் போரில் களத்தில் நின்று போரிட்ட, பலியான வீரர்களின் வாழ்வு குறித்தவை. போரால் உறவுகளையும் வாழ்விடத்தையும் இழந்து இடப்பெயர்வுக்கு உள்ளாகும் மக்களின் துயரத்தை அவரது புதிய நாவலான ‘கர்ப்பநிலம்’ பேசுகிறது.

யாழ் நகரைச் சிங்கள ராணுவம் கைப்பற்றியபோது, அங்கிருந்த மக்களைப் புலிகள் பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் என்று இந்த நாவல் கூறுகிறது. போர்களின்போது மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கிறது.

இலங்கையில் தமிழ் இனம் அழித்தொழிக்கப்பட்டபோது, சிங்கள மக்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினரிடையே அது ஏற்படுத்திக் கொடுக்கும் அரசியல், அதிகார, தொழில் வாய்ப்புகளைப் பற்றியும், அவற்றைக் கைப்பற்றிக்கொள்ள அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதையும் இந்த நாவல் சொல்லிச்செல்கிறது. அதே நேரத்தில், இனஅழிப்பு குறித்தும், தமிழர்கள் மீதான வல்லாதிக்கம் குறித்தும் சிங்கள மக்கள் சிலர் எத்தகைய வருத்தமும் கவலையும் கொண்டிருந்தார்கள் என்பதையும், அதற்காகக் குரல் கொடுத்த முகமற்ற எளிய குரல்களையும் சேர்த்தே பதிவுசெய்திருக்கிறது ‘கர்ப்பநிலம்’.

மொத்த சிங்கள மக்களையும் இனவெறியர்களாகச் சித்தரிப்பதில் அரசியல் புரியும் சிலருக்கு நாவலின் சில பகுதிகள் அதிர்ச்சிகளை அளிக்கலாம்.  ஆனால், ‘நாற்பதாண்டுகளுக்கு முன்பு போரற்ற சமூகமாய், தமிழரும் சிங்களரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை என்ற ஒன்றும் உண்டு, அதன் மதிப்பீடுகளை உணர்ந்த மக்கள் இரு தரப்பிலும் இன்னமும் உண்டு’ என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டியதில்லை.

x