நூலரங்கம்: சிரிப்புக் கடை


கவிஞர் இசையின் அடையாளம் கவிதையென்றாலும் தமிழ் இலக்கியத்தின் மீதுகொண்ட தீவிர ஆர்வத்தினால் பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் எழுதிவருகிறார். ‘சங்க காலத்திலிருந்து நவீன கவிதைக் காலம் வரை நகைச்சுவை'- என்றொரு சிறு ஆய்வின் முயற்சி அவரின் சமீபத்திய ‘பழைய யானைக் கடை' கட்டுரைத் தொகுப்பு.

தொகுப்பின் பல இடங்களில் நூலாசிரியரின் நகையுணர்வே மேலோங்கித் தெரிகிறது. புத்தகத்தின் தலைப்பான ‘பழைய யானைக் கடை’க்குக் காரணமான முடமோசியார் பாடல் ஓர் உதாரணம். அதையும் மீறி எளிய வாசகருக்கு, இசை அடையாளம் காட்டும் இலக்கிய நகை உதாரணங்கள்: ‘விடேன் யான்’ எனத் துவங்கும் அகப்பாடலில் ‘நின் முள்எயிறு உண்கும்’. தலைவனின் கூற்றாக வரும் இதன் அர்த்தம் முள்போன்ற கூரிய பற்களை உடைய வாயை உண்பேன் என்பதாகும். ‘வேல்போன்ற கண் கொண்ட பெண்ணும் இறுதியில் கோல் ஊன்றி நடப்பது திண்ணம்’ என்னும் நாலடியார் வரிகளை வாசிக்கையில் மெல்லிய புன்னகை தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

அதேபோல் ‘கூறு எமக்கு எந்தாய்’ எனத் தொடங்கும் அற்புதத் திருவந்தாதியில் சிவபெருமானைக் கேள்வி கேட்கும் காரைக்காலம்மையாரின் கேலியில் விளையாட்டு போல நகைச்சுவை தோன்றி மறைகிறது. நவீனக் கவிதைகளில், பெருந்தேவியின் ‘68-வது பிரிவு’ கவிதை முகத்தில் முழுக்க முழுக்க நகையுணர்ச்சியை எழுதியபடி நகர்கிறது.

‘நீதி நூல்கள் இரண்டு’ என்ற தலைப்பில் வரும் திருக்குறள் விளக்கம் வாசகருக்கு அயற்சியூட்டும் ஒன்று. தப்பிப் பிழைப்பது புலவி நுணுக்கம் குறித்த தொடர்பொருள் விளக்கம் மட்டுமே. அதேபோல் கம்பரின் கவிமனம் குறித்த நீளமான பதிவு, பாடலும் அதன் பொருளுமாய் நீள்கிறது.

x