மெல்லக் கொல்லப்படும் நாட்டுப்புற கலைகள்


மக்களின் அன்றாட வாழ்வில் இருந்தே உருவெடுத்தவை நாட்டுப்புறக் கலைகள். காடு, கழனிக்கு தலைச்சுமையாக கஞ்சி கொண்டுபோனதில் இருந்து உருவானதே கரகம். அடுக்குப்பானையில் பாலும், தயிரும் கொண்டுபோன திறமையே, அடுக்குக் கரகம் ஆனது. மலைவாழ் மக்கள், மலையேறப் பயன்படுத்தும் ஊன்று குச்சிகளை வைத்து ஆடியதே ஊன்றுகோல் ஆட்டம். கால்நடை மேய்ப்போர் இரவில் வெளிச்சத்துக்காகப் பயன்படுத்திய திரியும், குடிப்பதற்காகப் பயன்படுத்திய ஆட்டுத்தோல் தண்ணீர்ப்பையுமே தற்போது கள்ளழகர் திருவிழாவில் திரியெடுத்து ஆடுதல், துருத்தி எடுக்கும் கலையாக எஞ்சி நிற்கிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தக் கலைகளுடன், வாய்மொழி வரலாறுகள், பாடல்கள், கூத்துக்கள் என்று மொத்தம் 1,024 நாட்டுப்புறக்கலைகள் தமிழகத்தில் இருந்ததாகச் சொல்கிறார் பேராசிரியரும், நாட்டுப்புறக் கலையை மீட்டுருவாக்கம் செய்து வருபவருமான இரா.காளீஸ்வரன்.

திரைப்பட அரங்கின் உள்ளும், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பும், செல்பேசியின் தொடுதிரையின் வசத்திலும் சிக்கிகொண்டுவிட்ட ஜனக்கூட்டம்... தங்கள் மொழியும், இனமும், பண்பாடும் கடந்து வந்த பாதையின் அருமையே புரியாமல் முடங்கியதன் விளைவு அத்தனை சாதாரணமானதல்ல! ஒவ்வொரு வட்டாரம், இனக்குழுக்களுக்கேயான பிரத்யேகக் கலைகளில் பெரும்பாலானவை ஆதரிக்க ஆளில்லாமல் அழிந்தே போய்விட்டன. மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் குற்றுயிராகக் கடைசி மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் சில கலைகளும்கூட, கோயில் திருவிழாக்கள், முக்கியச் சடங்குகளின்போது மட்டும் அரை வயிற்றுக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்புவரையில், ஓரளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த சில ஆட்டங்களும்கூட தற்போது நலிந்துவிட்டன. கிராமிய விழாக்கள் களைகட்டுகிற பங்குனி மாதம் என்பதால், நாட்டுப்புறக் கலைகளைத் தேடிப் பயணப்பட்டோம்.

x