அழகியலுக்குள் கலை சுருங்கிவிடக் கூடாது- ஓவியர் சி.பி.கிருஷ்ணப்ரியா


சென்னை ஸ்பேசஸ் அரங்கில் நடக்கும் ‘உழைப்பை ஆவணப்படுத்துதல்’ (‘ஆர்கைவிங் லேபர்’) கலைக்காட்சி சென்னை, கும்பகோணம் அரசுக் கவின் கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த 33 மாணவர்களை முன்னுக்குக் கொண்டுவருகிறது. கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஓவியர் சி.பி.கிருஷ்ணப்ரியாவிடம் பேசியதிலிருந்து...

கலைக்காட்சி என்றால், என்னென்ன படைப்புகளை எல்லாம் உள்ளடக்கியிருக்கிறீர்கள்?

2016-ல் ‘கொச்சி பினாலே’வின் (கொச்சியில் நடந்த சர்வதேசக் கலைக் கண்காட்சி) ஒரு பகுதியான ‘ஸ்டூடண்ட் பினாலே’வுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட கண்காட்சி இது. சென்னை கலைக் கல்லூரியில் நெடுங்காலமாக மூடி வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் புதிய உயிர்ப்புள்ள பொருட்களை வைக்கலாம் என்பதற்காக உழைப்பு சார்ந்த கலைப்படைப்புகளை உருவாக்கலாம் என்று தோன்றியது.

சென்னை கவின் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த தேவி பிரசாத் ராய் சௌத்ரியால் செதுக்கப்பட்ட உழைப்பாளர் சிலை இதற்குப் பெரும் உந்துதலாக இருந்தது. அந்த அடிப்படையில் இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற மாணவக் கலைஞர்கள் எதிர்கொண்ட உழைப்பின் கதைகள் அவர்களது கலை வெளிப்பாடாக இங்கே இடம்பெற்றிருக்கின்றன.

x