இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார எல்லைகள் விரிவடைந்தது, ஆங்கிலேயரின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராகச் சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்தது என்று இந்திய வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளின் சாட்சியமாக வாழ்ந்து மறைந்த பஹாதுர் ஷா ஜபரின் வரலாறு இந்தப் புத்தகம்.
ஏற்கெனவே டெல்லியில் முகாமிட்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளின் அலட்சியத்துக்கு ஆளாகியிருந்த பஹாதுர்ஷா, மறுபுறம் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகளாலும் மன வருத்தத்தில் இருந்தார். உருதுக் கவிஞராக இருந்த பஹாதுர்ஷா, சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார்.
1857 மே 10-ல் மீரட்டில் தொடங்கிய சிப்பாய்க் கிளர்ச்சி டெல்லியை நோக்கி நகர்ந்தது. சிப்பாய்களை பஹாதுர்ஷா முதலில் வரவேற்கவில்லை. விரைவிலேயே அவரது மனம் மாறியது. நகரம் கொள்ளையடிக்கப்பட்டு, பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும், சிப்பாய்களின் வரவு தனது முகலாய வம்சத்தை மீண்டும் நிறுவிக்கொள்வதற்கான அரிய வாய்ப்பாகக் கருதிய பஹாதுர்ஷா சிப்பாய்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அதுதான் முகலாய வம்சத்தின் முடிவை நோக்கி இட்டுச்சென்றிருக்கிறது.
இந்து தாய்க்குப் பிறந்தவர் என்பதால்இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரு மதத்தினரும் அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தனர். இறுதியில், ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, ரங்கூன் சிறையில் மரணமடைந்து அநாமதேயக் கல்லறையில் புதைக்கப்பட்டார் பஹாதுர்ஷா.