பார்வதிதேவியின் தந்தை தக் ஷனின் கதையை நினைவு கூறும், ‘தக்கன் யாகம்’ கூத்து சென்னையில் புத்துயிர் பெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறது அஸீமா அறக்கட்டளை. அதன் நிறுவனர் முனைவர் வி.ஆர்.தேவிகாவிடம், பேசியதிலிருந்து:
‘தக்கன் யாகம்’ கூத்துப் பிரதியை வெளியிடும் நோக்கம் என்ன?
மரபு நிகழ்த்துக் கலைகளுக்கும், கல்விக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம். காஞ்சிபுரத்தில் இயங்கும் கட்டைக்கூத்து பள்ளியில் பயின்ற இளம் கலைஞர் திலகவதி பழநி, தாக் ஷாயணியின் கதையான தக்கன் யாகத்தைக் கூத்தாக அரங்கேற்ற வேண்டும் என்கிற ஆர்வத்தில் என்னை அணுகினார். இந்தக் கூத்துக்கான பாடல்களைக் கலைஞர்களிடமிருந்து சேகரித்து முழுப் பிரதியைத் தயாரிக்கலாம் என்றார்.
டெல்லியில் உள்ள சங்கீத் நாடக அகாதெமியிடம் பேசி அவர்கள் உதவியுடன் இந்தப் பணியை ஒருங்கிணைத்தோம். மார்ச் 23ம் தேதி சென்னையில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை முத்தமிழ் பேரவை மன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், கூத்தின் முதல் பிரதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து கூத்தின் சுருக்கப்பட்ட வடிவம் அரங்கேறும்.