தேனியில் இருந்த என் நண்பன் கணேசன், “தம்பி, சனி ஞாயிறுதேனிக்கு வாடா. மூணாறு போவோம்” என்றான். 200 ரூபாய், இரண்டு பைக்குகள் என நான்கு நண்பர்கள் கிளம்பினோம். பாதி வழி போன பிறகுதான் தெரிந்தது, வண்டிக்கார நண்பர்கள் ‘பைக்’ மட்டும்தான் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது. கேட்டால், “பணம், காசைவிட நட்பு தான்டா பெருசு” என்றார்கள். ஒருவழியாகத் தேற்றிக்கொண்டு பெட்ரோல் போட்டு மூணாறு சேர்ந்தோம்.
எங்களது பட்ஜெட்டுக்கு அறை கிடைக்கவில்லை. பஸ் நிலையத்தில் ‘சுவெட்டர்’ விற்கும் தாத்தா உபயத்தில் இரவல் சுவட்டர்களுக்குள் சுருண்டு சுவெட்டர் மூட்டையாகவே உருமாறி, குளிர் இரவைக் கழித்தோம். இடையில் மூத்திர நெடி வீச, “டேய் எவன்டா அவன் பெட்ல உச்சா போறது?” என்று திட்டிவிட்டுத் திரும்பிப் படுத்தேன். விடிந்ததும்தான் தெரிந்தது, நாங்கள் படுத்திருந்த இடமே ஒரு மூத்திரக்குழிதான் என்பது. மறுநாள் காலையில் கிளம்பல்.
பெட்ரோலுக்குக் காசு வாங்கிய ஒரு நண்பன் தன் வயிற்றுக்குப் ‘பெட்ரோல்’ போட்டுக்கொண்டான். ஆக, புறப்பட்ட சில கிலோ மீட்டரிலேயே ஒரு வண்டி நின்றுவிட்டது. ஏற்றத்தில் ‘தள்ளுத்தள்ளு’, இறக்கத்தில் ‘நியூட்ரல்’ என்று ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தோம்.
இன்றைய மதுரை - தேனி பயணம் அப்படியல்ல. சொந்த பைக். பெட்ரோலுக்குப் பிரச்சினையில்லை. வழித்துணைக்கு நண்பன். பைக்கை சர்வீஸ் விட்டு, ஹெல்மெட், உரிய ஆவணங்கள், தண்ணீர் பாட்டில் என ஏக முன் ஏற்பாடுகளுடன் கிளம்பினோம். வைகை வடகரையினுள் வண்டியை திருப்பினோம்.