பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மும்முரம்: வக்பு மசோதாவுக்கு பின் அடுத்த அதிரடியை தொடங்கும் பாஜக!  


புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்குப் பிறகு, மோடி தலைமையிலான மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை (யுசிசி) நிறைவேற்ற தயாராகி வருகிறது. இப்போது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக பொது சிவில் சட்டம் உள்ளது. யுசிசிக்கான வரைவைத் தயாரிப்பதற்கான 23வது சட்ட ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வக்பு சட்டத்திருத்த மசோதா நாடு முழுவதும் ஏற்படுத்திய சலசலப்புகள் இன்னும் ஓயாத நிலையில், அடுத்ததாக பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது மத்திய பாஜக அரசு.

இதனை உறுதி செய்யும் விதமாக ஞாயிற்றுக்கிழமையன்று ஹரியாணாவில் அம்பேத்கரின் பிறந்தநாள் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி , “உத்தரகாண்டில் உள்ள இரட்டை இயந்திர அரசாங்கம் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது, அதை நான் மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்று அழைக்கிறேன், ஆனால் காங்கிரஸ் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. உத்தரகாண்டில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மதச்சார்பற்ற சிவில் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் அதிரடியாக செயல்படுத்தப்பட்டது" என்று பிரதமர் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “உத்தரகண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சீரான சிவில் சட்டத்தை உறுதி செய்வதற்கான மாநிலத்தின் முயற்சியை கோடிட்டுக் காட்டும் அரசியலமைப்பின் 44வது பிரிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. உத்தரகாண்டின் பொது சிவில் சட்டம் பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ளது" என்று அவர் கூறியிருந்தார். நாட்டிலேயே முதல் மாநிலமாக கடந்த ஜனவரி மாதம் உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் சட்ட ஆணையம் இயங்குகிறது. இதன் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படும் சட்ட ஆணைய குழு, சட்ட சீர்திருத்தங்கள் குறித்துஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில் 23-வது சட்ட ஆணைய குழுவின் ஆய்வு வரம்பில் பொது சிவில் சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

x