ஹிசார்/யமுனாநகர்: வாக்கு வங்கி வைரஸை காங்கிரஸ் பரப்பி வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஹரியானாவின் ஹிசார் விமான நிலையத்தில் ரூ.410 கோடியில் புதிய முனையம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
ஹிசாரில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம். இது 2-வது தீபாவளி பண்டிகை போன்றது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 11 ஆண்டுகளாக அம்பேத்கர் காட்டிய வழியில் ஆட்சி நடத்தி வருகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், பழங்குடிகள், பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அயராது பாடுபட்டு வருகிறது.
அம்பேத்கரின் கொள்கைகளை அழிக்க காங்கிரஸ் விரும்பியது. அவர் வரையறுத்த அரசியலமைப்பு சட்டத்தையும் அழிக்க அந்த கட்சி முயற்சி செய்தது. நாடு முழுவதும் சமத்துவத்தை நிலைநாட்ட அம்பேத்கர் விரும்பினார். ஆனால் அவரது கொள்கைக்கு நேர்மாறாக வாக்கு வங்கி வைரஸை காங்கிரஸ் பரப்பி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாடு முழுவதும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. இது 150-ஐ தாண்டியுள்ளது. உதான் திட்டத்தில் 600 வழித்தடங்களில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளன. அங்கு மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம் அம்பேத்கரை அந்த கட்சி அவமதித்தது.
முஸ்லிம்களின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. அப்படி யென்றால் அந்த கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.
அனல் மின் நிலையம் விரிவாக்கம்: ஹரியானாவின் யமுனாநகரில் தீன்பந்து சோட்டுராம் அனல் மின் நிலையம் செயல்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அலகை கட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அங்கு உயிரி எரிவாயு ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.1,070 கோடியில் கட்டப்பட்ட ரேவாரி புறவழிச் சாலையை அவர் திறந்து வைத்தார்.