‘‘வக்பு வாரியம் பெயரில் பல இடங்களில் நில ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவது, பொது சொத்து மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு உரிமை கோருவதை ஒரு போதும் பொருத்துக் கொள்ள முடியாது’’ என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நேற்று நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் கூறியதாவது: பல நகரங்களில் உள்ள இடங்களுக்கு வக்பு வாரியம் உரிமை கொண்டாடுகிறது. கும்ப மேளா நடத்தப்பட்டபோதும், பல இடங்களுக்கு வக்பு வாரியம் உரிமை கொண்டாடியது. வக்பு வாரியம் நில மாஃபியாவாக மாறிவிட்டதா? எனது ஆட்சியில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டன. மாஃபியாக்கள் உத்தர பிரதேசத்தைவிட்டே விரட்டியடிக்கப்பட்டனர். நிசாத் ராஜ் தொடர்புடைய புனித இடங்களுக்களைக் கூட வக்பு வாரியம் ஆக்கிரமித்திருந்தது. இது தொடர அனுமதிக்க கூடாது. பொது சொத்து மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு உரிமை கோருவதை ஒரு போதும் பொருத்துக் கொள்ள முடியாது.
வக்பு வாரியத்தின் முறைகேடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பாராட்டுகிறேன். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்