பாட்னா: பிஹார் மாநிலம் பாட்னாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் கூட்டுறவு துறைக்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் மூலம் பிஹார் மிகப்பெரிய அளவில் கூட்டுறவுத் துறையில் பலன்களைப் பெற்றுள்ளது.
அவரது பதவிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களால் பிஹார் மக்கள் நல்ல பலனை அடைந்துள்ளனர். இதன் மூலம் தேசிய அளவில் உள்ள மக்களுக்கும் நன்மை கிடைத்துள்ளது.
முன்னாள் முதல்வர்கள் லாலு , ராப்ரி தேவி ஆட்சி காலத்தில் மக்கள் பயத்தில் வாழ்ந்தனர். இரவில் வீட்டை விட்டு வெளியேற அஞ்சினர். ஆனால் அந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது.
சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிஹாரின் மாதிரியானது இப்போது தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறும் முடிவை எடுத்து தவறு செய்துவிட்டேன்.
ஆனால், இனி, மீண்டும் அதுபோன்றதொரு தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிப்பேன். ஒரு போதும் கைவிடமாட்டேன். இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.