நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மியான்மருக்கு 60 டன் நிவாரணப் பொருட்களுடன், மருத்துவ குழுவினரையும் இந்தியா அனுப்பியுள்ளது.
மியான்மரில் 7.7 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. இதையடுத்து, அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சி-17 ரக விமானங்களில் 60 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அத்துடன், இந்திய ராணுவ குழுவில் பணியாற்றும் பெண் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிபுணர்களையும் நிவாரணப் பணிகளுக்காக மியான்மருக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்க இந்திய ராணுவம் 60 படுக்கைகள் கொண்ட மருத்துவ சிகிச்சை மையத்தையும் தேவையான இடங்களில் அமைக்க உள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறுகையில், “ அண்டை நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படும்போது முதலாவதாக ஓடிச்சென்று உதவ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டு சி-17 ரக விமானங்களுடன் சேர்த்து மொத்தம் 5 விமானங்கள் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், மருத்துவ குழுவினர், நிவாரணப் பொருட்களுடன் மியான்மரில் இன்று (செப்.30) தரையிறங்கும்" என்றார்.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,600 பேர் உயிரிழந்ததுடன், 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் அதிக அளவில் மீட்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை 10,000 தாண்டக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.