நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த 14-ம் தேதி திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் சென்று அணைக்கும்போது பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த
சம்பவம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட உள்விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இக்குழு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய கோரி வழக்கறிஞர் மேத்யூ ஜெ.நெடும்பாரா உள்ளிட்ட 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களின் மனு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தற்போது உள்விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பிறகு அனைத்து வாய்ப்புகளுக்கான கதவுகளும் திறந்துள்ளது. தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்ய தலைமை நீதிபதி உத்தரவிடுவார். அதற்குள் நாங்கள் ஏன் தலையிட வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினர். பிறகு மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதி வர்மா இடமாற்றம்: இதற்கிடையில் மத்திய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.