அமித் ஷா மீதான உரிமை மீறல் நோட்டீஸை நிராகரித்தார் ஜெகதீப் தன்கர்


மத்திய அமைச்சர் அமித் ஷா மீதான உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவைத் தலாவர் ஜெகதீப் தன்கரிடம் ஒரு நோட்டீஸ் வழங்கி இருந்தார். அதில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அமித் ஷா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருமாறு கோரி இருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது, பிரதமரின் நிவாரண நிதியை நிர்வகிக்கும் குழுவில் அக்கட்சியின் தலைவர் இருந்தார் என அமித் ஷா கூறியிருந்தார். இதை எதிர்த்துதான் ஜெய்ராம் ரமேஷ் இந்த நோட்டீஸை வழங்கி இருந்தார்.

இதுகுறித்து ஜெகதீப் தன்கர் கூறும்போது, “கடந்த 25-ம் தேதி பேரிடர் மேலாண்மை மசோதா மீதான விவதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் அமித் ஷா சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக, கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டினார். அதில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்தை தொடங்குவதாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேறு அறிவித்தார். அதை பிரதமர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு நிர்வகிக்கும் என்றும் தெரிவித்தார். எனவே, அமித் ஷா விதிமீறலில் ஈடுபடவில்லை. அவர் மீதான உரிமை மீறல் தீர்மானம் நோட்டீஸ் நிராகரிகரிக்கப்படுகிறது” என்றார்

x