உ.பி.யில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் மிகவும் பாதுகாப்புடன் இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் அவர்கள் சுதந்திரமாக பின்பற்ற முடியும். ஆனால் 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்புடன் இருக்க முடிகிறதா? இல்லை.
இதற்கு வங்கதேசம் ஒரு உதாரணம். இதற்கு முன்பு, பாகிஸ்தான் உதாரணமாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? நாம் தாக்கப்படுவதற்கு முன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதையே கவனத்தில் கொள்ள வேண்டும்.
உ.பி.யில் 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதக் கலவரம் எதுவும் நடைபெறவில்லை. உ.பி.யில் முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர். இந்துக்கள் பத்திரமாக இருந்தால் முஸ்லிம்களும் பத்திரமாக இருப்பார்கள்.
உ.பி.யில் 2017- க்கு முன்பு கலவரங்கள் நடந்தன. இந்து கடைகள் எரிந்தால், முஸ்லிம் கடைகளும் எரிந்தன. இந்து வீடுகள் எரிந்தால், முஸ்லிம் வீடுகளும் எரிந்தன. ஆனால் 2017- க்கு பிறகு கலவரங்கள் நின்றுவிட்டன,
நான் ஒரு சாதாரண குடிமகன், உத்தரபிரதேச குடிமகன். நான் அனைவரின் மகிழ்ச்சியை விரும்பும் ஒரு யோகி. அனைவரின் ஆதரவு மற்றும் வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவன்.
சனாதன தர்மம் உலகின் மிகப் பழமையான மதம் மற்றும் கலாச்சாரம் ஆகும். சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மற்றவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றவில்லை. ஆனால் அதற்கு பிரதிபலனாக அவர்கள் என்ன பெற்றார்கள்?
உலகில் எங்கும் இந்து ஆட்சியாளர்கள் தங்கள் பலத்தை பயன்படுத்தி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதாக உதாரணம் இல்லை. அதுபோன்ற நிகழ்வுகள் இல்லை. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்