மக்களவையில் நான் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் மக்களவை கூடியதும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார்.
அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் ஓம் பிர்லா, “உறுப்பினர்களின் நடத்தை இந்த அவையின் உயர்ந்த தரத்துக்கு ஏற்றதாக இல்லை என பல முறை என் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த அவையில், தந்தையும் மகளும், தாயும் மகளும், கணவனும் மனைவியும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய விதி எண் 349-க்கு இணங்க எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்ள வேண்டும்” என்றார். பின்னர் அவையை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நான் பேச முற்படும்போதெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது. நான் ஒன்றும் செய்யவில்லை. நான் அமைதியாக உட்கார்ந்திருக்கிறேன். கடந்த 7 – 8 நாட்களாகவே என்னை பேச அனுமதிப்பதில்லை. இது புதிய தந்திரம். எதிர்க்கட்சிகளுக்கு அவையில் இடம் இல்லை.
அவையில் ஒரு நாள் கும்பமேளா பற்றி பிரதமர் மோடி பேசினார். அப்போது வேலையின்மை குறித்து நான் பேச விரும்பினேன். ஆனால் அவைத் தலைவர் ஓம் பிர்லா எனக்கு அனுமதி வழங்கவில்லை. இது ஜனநாயக விரோத செயல்.
இன்று கூட (நேற்று) அவையில் பேச அனுமதி கோரினேன். அப்போது என்னைப் பற்றி ஏதோ ஆதாரம் இல்லாமல் தெரிவித்த அவர், அவையை ஒத்தி வைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அவையை ஒத்தி வைப்பதற்கான தேவையே எழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்