தெலங்கானா தண்ணீர் கால்வாய் சுரங்கத்தில் மேற்கூரை சரிந்து இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களில் மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம் அணையின் இடதுபுற கால்வாயில் இருந்து தெலங்கானா மாநிலம், நல்கொண்டா வரை 14 கி.மீ தூரத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியின் போது கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி காலை மேற்கூரை சரிந்து விழுந்து கோர விபத்து நடந்தது. இந்த இடிபாடுகளில் 8 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர்.
சுரங்கத்துக்குள் சிக்கிய அந்த 8 பேரை மீட்க கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், உள்ளூர் போலீஸார், ராணுவத்தினர் என சுமார் 9 குழுக்கள் இரவு, பகலாக பாடுபட்டனர். மேலும், ட்ரோன்கள், மோப்ப நாய்கள், ரோபோக்கள் என பலவற்றை உபயோகித்து 8 பேரை மீட்க போராடினர். இந்நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதியன்று இரவு, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குருபிரீத் சிங் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் மிஷின் ஆப்பரேட்டராக பணியாற்றியதும் தெரிய வந்தது. அதன் பின்னர், அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவரின் குடும்பத்துக்கு தெலங்கானா மாநில அரசு ரூ. 25 லட்சம் நிதி உதவியும் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 7 பேரின் சடலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று சுரங்கத்துக்குள் மற்றொரு ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரின் அங்க அடையாளங்களை வைத்து இறந்து போனவர் திட்ட பொறியாளர் மனோஜ்குமார் என்பது தெரியவந்தது. அதன் பின்னர், சடலத்தை நாகர்கர்னூல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், இவரின் சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் நாகர் கர்னூல் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
இவரின் குடும்பத்தாருக்கும் தெலங்கானா மாநில அரசு ரூ.25 லட்சம் நிதி உதவியை இன்று வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது