மக்களவை தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கு மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு விதிமுறைகளே காரணம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் குறிப்பாக தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். ஆதலால் மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் வேறு வழிகளில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சமமான உரிமை வழங்கிட வேண்டும்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் நாட்டின் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜெகன்மோகன் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெகன் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி ஆஜராகி கடித நகலை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.